அகமதாபாத், நவ. 16-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ஊழல் வழிகளில் பெற்ற பணம் ரூ. 12 லட்சம் கோடியை காங்கிரஸ் தலைவர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பரபரப்பு குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார்.
500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் பெருமளவு பணத்தை சிறிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் படும் அவலங்களையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் மீது பாரதிய ஜனதா திடுக்கிடும் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா கூறியதாவது:
சோனியா-மன்மோகன்சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், மாதந்தோறும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. அது 2-ஜி ஆக இருந்தாலும் சரி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் சரி, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, விமான கொள்முதல் உள்ளிட்ட இதர விவகாரங்களானாலும் சரி இந்த ஊழல்கள் அரங்கேற்றுப் பட்டு வந்தன.
இதுபோன்ற பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு காங்கிரஸ் தலைவர்கள் 12 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இந்தத் தொகை மத்திய அரசின் 3 பட்ஜெட்டுகளுக்கு சமமானது. இந்த ஊழல் பணங்கள் எல்லாம், வீடுகள், குடோன்கள், அவர்களது நண்பர்களின் இடங்களில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8-ந் தேதி அறிவித்துள்ளார். இதனால் காங்கிரசார் முகங்களில் இருந்த சந்தோஷம் பறிபோய் உள்ளது. காங்கிரசார் பதுக்கி வைத்துள்ள ஊழல் பணங்களை எல்லாம் ஒரே நாளில், குப்பையில் வீசும் வெற்றுக் காகிதங்களாக்கி விட்டார் நரேந்திரமோடி.
பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை வெள்ளம் அடித்துச் சென்றது போன்ற வேதனையுடன் அவர்கள் உள்ளனர். வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற (ஊழல் பணத்தை) காங்கிரஸ் தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா, முலாயம்சிங் உள்ளிட்டோர் கைகோர்த்து உள்ளனர்.
நானும் சரி, இங்கு கூடியுள்ளவர்களும் சரி (பாஜக கட்சியினர்), எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், எங்களிடம் கருப்புப் பணம் கிடையாது. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மட்டும்தான் இந்த உத்தரவால் கவலை அடைந்துள்ளனர்.
ராகுல்காந்தி, 4 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் செல்கிறார். இதுபோன்ற மனிதர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் பணம் எப்போதும் தேவைப்படுமா? ராகுல்காந்தி ஏழை மக்களைப் பற்றி பேசுகிறார். ஏழை மக்கள் மீது ராகுல்காந்திக்கும், அவரது காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இருக்குமானால், 12 லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்திருக்கக் கூடாது.
500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அப்பாவி மக்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேசமயம் அந்த மக்கள் நீண்டநாள் பலனை பின்னர் அனுபவிக்கப் போகிறார்கள். ஒரு நபருக்கு அறுவை சிகிச்சை செய்தால், அந்தப் புண் முழுமையாக ஆறும் வரை வலி இருந்து கொண்டுதான் இருக்கும். இதுவும் அப்படித்தான். ஏ.டி.எம். களில் மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் நடவடிக்கை எல்லாம் தற்காலிகமானதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
