1120 women apply to go haj in kerala without gents
ஆண்கள் துணை இல்லாமல் (மெஹ்ரம்) ‘ஹஜ்’ புனித பயணம் செல்ல கேரள மாநிலத்தில் இருந்து 1,120 பெண்கள் இந்திய ஹஜ் குழுவுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் இருந்து அதிகமாக பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி உறுதி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 31-ந்தேதி மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியபோது, “ ஆண்கள் துணையில்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 1,300 பெண்களுக்கும் சிறப்பு அனுமதி அளிக்கும்’’ எனக் கூறியிருந்தார்.

கேரளா முதலிடம்
அந்த அறிவிப்புக்கு பின், இந்திய ஹஜ் குழுவுக்கு கேரளா மாநிலத்தில் இருந்து 1,120 பெண்களும், மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து 48 பெண்களும் விண்ணப்பித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களான உத்தரப்பிரதேசத்தில் இருந்து 32 பெண்ள், கர்நாடக மாநிலம் 28, முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநிலத்தில் இருந்து 4 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தலா 4 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குஜராத்தில் இல்லை
அதேசமயம், பீகார், குஜராத் மாநிலத்தில் இருந்து எந்த பெண்களும் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் படி, ஆண்கள் துணை இல்லாமல், பெண்கள் 4 பேராக சேர்ந்து தனித்தனி குழுவாக செல்ல முடியும் .
மிகப்பெரிய முயற்சி
இது குறித்து இந்திய ஹஜ் குழுவின் உறுப்பினர் தயாபா அபான்டி கூறுகையில், “ பெண்கள் தனியாக ஹஜ் புனித பயணம் செய்ய அனுமதித்து இருப்பது மத்திய அரசு எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கையாகும். தனியாக செல்லும் பெண்களை சிறப்பு பிரிவில் அரசு அனுமதிக்கிறது. சவூதி அரசு ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ் பயணம் வரலாம் என சில ஆண்டுகளுக்கு முன்புதான் மாற்றி இருந்தும் கூட, அதை மத்திய அரசு மிக விரைவாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

உரிமை, அதிகாரம் உறுதி
மதரீதியாக முஸ்லிம் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த சமூகத்தில் கைதிகளாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்கள் இல்லாமல் மெக்காவுக்கு செல்ல முடியாத நிலை பெண்களுக்கு இதற்கு முன் இருந்தது. இந்த முயற்சி பெண்களின் உரிமை மற்றும் அதிகாரம் உறுதி செய்யப்பட்டு இருப்பதை காட்டுகிறது’’ எனத் தெரிவித்தார்.
