உத்தரபிரதேசத்தில் ஏழை மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் வகையில் ஜன்தன் என்ற பெயரில் வங்கிக் கணக்கு ஏற்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த வங்கிக்கணக்குகளில் மானியங்கள், காப்பீடு பணம், அரசின் நிவாரண உதவி பணம் போன்றவை செலுத்தப்படுகின்றன. தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் மொரதாபாத் மாவட்டத்தில் 1,700 ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 1.7 கோடி ரூபாய் கடந்த சில நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள இந்தப் பணவர்த்தனையை விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஏதாவது ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் தனக்கு ஓட்டு போடுவதற்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வழங்கியிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையையும் களமிறக்கியுள்ளது.