ரெயில்வேதுறையின் சமையல் பிரிவு சந்தையில் விற்கப்படும் பொருட்களின் அதிகபட்ச விலையைக் காட்டிலும் பல மடங்கு காசு கொடுத்துதான் வாங்கி சமையல் செய்வது தெரியவந்துள்ளது. இது ஊழலா அல்லது வேண்டுமென்றே நஷ்டத்தில் இயக்க செய்யப்பட்ட வழியா என்பது தெரியவில்லை.

அதாவது, ஒரு கிலோ உப்பு ரூ. 49க்கும், சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் சமையல் எண்ணெயை ரூ.1241-க்கும், 100 கிராம் தயிரை ரூ.972க்கும் வாங்கியுள்ளது.

இதுபோல ஏராளமான சமையல் பொருட்கள் அவற்றின் உச்சகட்ட விலையை விடப் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளன.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஜெய் போஸ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டபோது இந்த தகவல்கள் வந்துள்ளன. இதை அவர் ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அஜய் போஸ் கூறுகையில், “ரெயில்வே சமையல் பிரிவு, சமையல் பொருட்களை என்ன விலைக்கு வாங்குகி உள்ளனர் என்பதை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு பதில் அளிக்க ரெயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து நான் மேல்முறையீடு செய்தேன். மேல்முறையீட்டு அதிகாரி 15 நாட்களுக்குள் எனக்குத் தகவல்களைத் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முறையீடு செய்தேன். அப்போது ரயில்வே நிர்வாகம் அளித்த தகவல்கள் என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், 972ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்தது. அதேபோல அனைத்துப் பொருட்களுமே அதிகபட்ச சில்லரை விலையைக் காட்டிலும்  பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டு இருந்தது.

ரயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப்பட்டு சமையல் கிடங்கு, ஐஆர்சிடிசி மக்கள் உணவகங்ககள், ரயில்வே சமையலறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

எலும்புத் துண்டுடன் கூடிய சிக்கன், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு கை துடைக்கும் டிஷ்யூ பேப்பர் கூட பல மடங்கு விலையில் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி, ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ. ஆயிரத்து 241க்கும், 58 லிட்டர் எண்ணெய் ரூ.72 ஆயிரத்து 034-க்கு வாங்கப்பட்டுள்ளது, டாட்டா உப்பு 150 பாக்கெட்டுகளை ரூ.2,670க்கும் (அதாவது1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மையான விலை ரூ.15) வாங்கியுள்ளனர்.

அதேபோல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதத்தில் வாங்கப்பட்டுள்ளன. சமோசாக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மாதிரியான சில பொருட்கள் மட்டுமே சரியான விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

ரயில்வே அறிக்கைகள் ரயில் உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியுள்ளன. ஆனால் ஆர்டிஐ மூலம் உண்மையான நிலையும், நஷ்டத்துக்கான காரணமும் தெரிய வந்துள்ளது'' என்கிறார்.

இந்த பன் மடங்கு விலை உயர்வு குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது ஆவணங்களில் மட்டும் ஏற்பட்ட பிழை இல்லை. ரயில்வே நஷ்டத்தில் இயங்குவதற்கு இத்தகைய ஊழல்களே காரணம். இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.