பிரதமர் மோடி அறிவித்த, ‘சுகன்யா சம்ரிதி’ வங்கிக் கணக்கான ‘செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் 14.44 லட்சம் வங்கிக்கணக்குகளுடன், ரூ.1,962 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஒரு புறம் மத்தியில் மோடியின் அரசை தமிழக மக்களும், கட்சிகளும் கடுமையாக எதிர்த்து, விமர்சனம் செய்து வருகின்றனர். அதேசமயம், அவர் கொண்டு வந்த திட்டத்தையும் நன்றாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது தபால்நிலையங்களில் மட்டுமே செயல்படுத்தக் கூடிய திட்டமாகும். பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கி ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை குறிப்பிட்ட 14 ஆண்டுகளுக்கு ெடபாசிட் செய்வதாகும். அதன்பின் பெண் குழந்தையின் பட்டப்படிப்பு செலவுக்காக பாதி தொகையும், திருமணத்துக்காக மீதி தொகையும் வட்டியுடன் கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் பணத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த ஜூன் 30-ந்தேதிவரை 1.13 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.15 ஆயிரத்து 849 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தில் மட்டுமே 14.44 லட்சம் கணக்குகளும், ரூ.1, 962 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

2-வது இடத்தில் கர்நாடக மாநிலத்தில் 10.57 லட்சம் கணக்குகளும்,மஹாராஷ்டிராவில் 9.7 லட்சம் கணக்குகளும் டெபாசிட்டாக ரூ.,2,142 கோடியும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்கள் மூலம் 4.81 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழில் பெயர் வைத்த அதிகாரி....

பிரதமர் மோடி இந்த திட்டத்தக்கு ‘சுகன்யா சம்ரிதி கணக்கு’ என்று பெயரிட்டார். இந்த கணக்கு தொடங்க வரும் பெற்றோர்கள் அந்த வார்த்தையை உச்சரிக்க தெரியாமல், மிகவும் திணறினர். இதை அறிந்த சென்னையின் முன்னாள் தபால்நிலைய தலைவர் மெர்வின் அலெக்சாண்டர், “ சுகன்யா சம்ரிதி’ திட்டத்தை செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று தமிழில் மொழிமாற்றம் செய்து அறிவித்தார். அதன்பின், இந்ததிட்டம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம் அடைந்தது.