India@75 Turning Points : சுதந்திர போராட்டத்தில் இந்திய ராணுவத்தின் எழுச்சி.!
பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியால்,1776ம் ஆண்டு, கொல்கத்தாவில், ராணுவப் படை தொடங்கப்பட்டது. இது தான், தற்போதைய இந்திய ராணுவத்தின் தொடக்கப் புள்ளி ஆகும்.
இதனைத் தொடர்ந்து, 1833ம் ஆண்டு, வங்காளம், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில், ராணுவப் படை விரிவுபடுத்தப்பட்டது. இவையனைத்தும் 1895ம் ஆண்டு, ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, பிரிட்டிஷ் - இந்திய ராணுவமாக உதயமானது. இதன் மேல்மட்டத்தில் ஆங்கிலேயர்கள் இருந்தாலும், அடுத்தடுத்த இடங்களில், இந்தியர்களே பொறுப்பில் இருந்தனர். அப்போது, பிரிட்டிஷ்காரர்களுக்காக, உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, வெளிநாட்டுப் போர்களிலும் இந்திய ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
உலகப் போர்களில், பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தின் பங்கு முக்கியமானது. ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் என, பல்வேறு நாடுகளுக்கும் இந்திய ராணுவப் படையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். முதலாம் உலகப்போரில், சுமார் 13 லட்சம் இந்தியப் படையினர் பங்கேற்றனர். அதில் 74 ஆயிரத்து 187 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில், இந்திய படையினர் 87 ஆயிரம் பேர், தமது இன்னுயிரை இழந்தனர். உலகப்போரில் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதாக கூறி, பிரிட்டிஷார் இந்த போர்களில் இந்தியர்களை அதிகம் ஈடுபடுத்தினர். 2ம் உலகப்போரின் போது, பிரிட்டிஷிடம் இருந்து, சிங்கப்பூரை கைப்பற்றியது ஜப்பான் ராணுவம்.
அப்போது சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர், 40 ஆயிரம் பேர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். இந்திய சுதந்திர போரில், இது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 1947ம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பத்து Gurkha regiment-களில், நான்கு regiment-கள், பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. இந்த ரெஜிமண்ட் பிரிவு, இன்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.. ஏராளமான கூர்காக்கள் அந்த ராணுவத்தில் இருக்கின்றனர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் மற்ற பிரிவுகள், இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் என, இரண்டாக பிரிக்கப்பட்டது.
இன்று, ஐ.நா அமைதிப் படைக்குழுவில், இந்திய படையினரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது.. மொத்த உறுப்பினர்களில், இந்திய படையினர் கணிசமாக உள்ளனர். உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக, இந்தியா மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்' எனும் 'G.F.P.' குறியீட்டில், தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இங்கிலாந்து, பிரான்ஸ்-க்கு மேலாக, இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு மேலே உள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான, 133 நாடுகளின் ராணுவ வலிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, அணு சக்திகளை கணக்கில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் தலைமை பொறுப்பை ஆங்கிலேயர் தான் கவனித்தனர். இந்நிலையில், 1948 ஜன., 15ல், ராணுவ தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் கரியப்பா ஏற்றார்.1955ல் ராணுவ தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.
1962ல் பாதுகாப்புக்கான தயாரிப்புத்துறை நிர்மாணிக்கப்பட்டது. 1980ல் டி.ஆர்.டி.ஓ தொடங்கப்பட்டது. 2004ல் முன்னாள் வீரர்களுக்கான நலவாரியம் ஏற்படுத்தப் பட்டது.1947ல் கட்டமைக்கப்பட்ட இந்திய ராணுவம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீனப்படுத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணைகள், நவீன பீரங்கிகள், ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதம் சுமந்து செல்லும் கப்பல்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது நம் இந்திய ராணுவம்.