- Home
- உலகம்
- US Tariff on India: இந்தியாவுக்கு 25% வரி? அமெரிக்காவின் புதிய அதிரடி அறிவிப்பு.. மற்ற நாடுகளுக்கு?
US Tariff on India: இந்தியாவுக்கு 25% வரி? அமெரிக்காவின் புதிய அதிரடி அறிவிப்பு.. மற்ற நாடுகளுக்கு?
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படலாம் என்ற நிலையில், வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் 17% ஆகக் குறைய வாய்ப்புள்ளது.

அமெரிக்கா புதிய வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்க முன்மொழிந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படலாம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் அது 17% ஆகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் புதிய வரி முன்மொழிவு, சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு ஒரு சதவீதம் முதல் மூன்று சதவீதம் வரை சாதகமான வரி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு 25% வரியா?
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR), உற்பத்தித் துறைகளில் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி இருப்பதாகக் கூறப்படும் புகார்களின் அடிப்படையில், பல்வேறு பொருளாதார நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மீது விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்த வரி 17% ஆகக் குறைக்கப்படும் என்ற சலுகையும் முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.
அதாவது, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படலாம். ஒப்பந்தம் கையெழுத்தானால் 17% வரி என்ற நிலை உருவாகலாம்.
மற்ற நாடுகளுக்கு எவ்வளவு வரி?
இந்தியாவுடன் ஒப்பிடும்போது, ஆசியாவின் போட்டி நாடுகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள வரி விகிதங்கள் சற்று அதிகமாக உள்ளன. வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் முன்மொழியப்பட்டுள்ள வரி விவரங்கள்:
• இந்தியா - 17%
• வங்கதேசம் - 18%
• கம்போடியா - 18%
• இந்தோனேசியா - 18%
• மலேசியா - 18%
• தாய்லாந்து - 18%
• வியட்நாம் - 20%
• சீனா - 20%
இதன்படி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியாவுக்கு ஒரு சதவீதம் குறைவான வரியும், வியட்நாம் மற்றும் சீனாவைவிட மூன்று சதவீதம் குறைவான வரியும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியாவின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதித் துறையில் இந்தியாவுக்கு இது ஓரளவு சாதகமான நிலையை உருவாக்கலாம்.
16 நாடுகள் மீது அமெரிக்கா விசாரணை!
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம், தைவான், வங்கதேசம், ஜப்பான், நார்வே, மெக்சிகோ மற்றும் இந்தியா என மொத்தம் 16 பொருளாதார நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தியுள்ளது.
உற்பத்தித் துறையில் கட்டமைப்பு ரீதியாகத் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பதில் என்ன?
அமெரிக்காவின் புதிய வரி முன்மொழிவு தொடர்பாக இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எந்தவொரு துறையிலும் கட்டமைப்பு ரீதியாகத் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் இல்லை என்று வர்த்தகத் துறை அமெரிக்க விசாரணையின்போது விளக்கியதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வதில் இந்திய அரசு தொடர்ந்து ஆர்வமாக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறதா அமெரிக்கா?
இந்தப் புதிய வரி முன்மொழிவு குறித்து Global Trade Research Initiative (GTRI) என்ற ஆய்வு அமைப்பு முக்கியமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இந்த நடவடிக்கை, பழைய பரஸ்பர வரி விதிப்பு முறையைப் புதிய பெயரில் மீண்டும் கொண்டுவருவதைப் போன்றது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அதிக வரி விதிக்கப்படும் என்ற அச்சத்தைக் காட்டி, மற்ற நாடுகளை அமெரிக்காவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வலியுறுத்தும் உத்தியாக இது இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளது.
ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளுக்கு குறைவான வரி என்றும், ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு அதிக வரி என்றும் இருவிதமான அணுகுமுறையை அமெரிக்கா கையாள்வதாகவும் GTRI சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் விசாரணையில் எதிர்மறையான முடிவு வந்தால், கூடுதல் வரிகள் அல்லது இறக்குமதி ஒதுக்கீடுகள் விதிக்கப்படும் அபாயமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாக, இது தற்போது முன்மொழியப்பட்ட வரி விதிப்பு மட்டுமே. இறுதி முடிவு மற்றும் அமலாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தியாவுக்கான 17% அல்லது 25% வரியை உறுதியான நடைமுறையாகக் கருதக்கூடாது.















