10 க்கு 12 மார்க்.. சீன அதிபருடன் சூப்பர் டீல்.. குஷியான டொனால்டு டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தென்கொரியாவில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, அரிய மண் தாதுக்கள் விநியோகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டு, வர்த்தகப் பதற்றங்கள் தணிக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை தென்கொரியாவில் சந்தித்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்தித்த நிலையில், வர்த்தகப் பதற்றங்களைத் தணிக்கும் முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அத்தியாவசியமான அரிய மண் தாதுக்களின் (Rare Earths) விநியோகம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
சீனாவுடன் கனிவள ஒப்பந்தம்
இதுகுறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து கனிமவள பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், ஆண்டுதோறும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், சீனா இந்தத் தாதுக்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது, இதற்குப் பதிலடியாக ட்ரம்ப் 100% வரி விதிப்பதாக அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
சீனாவிடமிருந்து வரும் ஃபெண்டானில் (Fentanyl) எனப்படும் அபாயகரமான போதைப்பொருளின் கடத்தலைக் கட்டுப்படுத்த தவறியதற்காக மார்ச் மாதம் சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 20 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
சந்திப்பு குறித்த ட்ரம்பின் கருத்து
சீன அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். "0 முதல் 10 வரை மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றால், இந்தச் சந்திப்புக்கு 10 க்கு 12 மதிப்பெண் கொடுப்பேன்!” என்று டிரம்ப் கூறினார்.
மேலும், பேச்சுவார்த்தையில் "பல விஷயங்களை இறுதி செய்துவிட்டோம்" என்றும், ஜி ஜின்பிங்கை "மிகவும் சக்திவாய்ந்த நாட்டின் அற்புதமான தலைவர்" என்றும் டிரம்ப் பாராட்டினார்.
எதிர்காலச் சந்திப்புகள்
"நான் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு அவர் (ஜி ஜின்பிங்) ஃபுளோரிடா, பாம் பீச் அல்லது வாஷிங்டன் டி.சி.க்கு எப்போதாவது வருவார்" என்று டிரம்ப் கூறினார்.
ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அமெரிக்கா-சீனா இடையே நீண்ட காலமாக நீடித்த வர்த்தகப் போர் மற்றும் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையே ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.