ஒரே வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. போர் வெறி பிடித்த புடின்.. டிரம்ப் குற்றச்சாட்டு
உக்ரைனில் ரஷ்ய அதிபர் புடின் போரைத் தொடர்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய மோதல் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் - டிரம்ப் விமர்சனம்
உக்ரைனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து போரை நடத்தி வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போர் "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய மோதல்" என்று அவர் வர்ணித்தார்.
பிடிவாதம் பிடிக்கும் புடின்
வெள்ளை மாளிகையில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயுடன் நடந்த இருதரப்பு சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாருங்கள், விளாடிமிருக்கும் எனக்கும் மிக நல்ல உறவு இருந்தது - ஒருவேளை இன்னும்கூட இருக்கலாம். அவர் ஏன் இந்தப் போரை இன்னும் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போர் மிகவும் மோசமாகிவிட்டது," என்று கூறினார்.
இன்னும் போரைத் தொடர்வது ஏன்?
அவர் மேலும் கூறுகையில், "அவர் ஒரு வாரத்தில் முடித்திருக்க வேண்டிய ஒரு போரை, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 15 லட்சம் வீரர்களை இழந்திருக்கிறார், அல்லது அதற்கு நெருக்கமான இழப்புகளைச் சந்தித்துள்ளார் - பயங்கரமான போர்களில் நடக்கும் அனைத்து விஷயங்களும் இங்கு நடக்கின்றன. உயிரிழப்பு அடிப்படையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போர் இதுதான்" என்று புடின் மீது டிரம்ப் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பு
டிரம்ப் அவர்களின் இந்த கருத்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அன்று வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு முன்னதாக வந்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரியில் தனது இரண்டாவது முறையாக அதிபரானதில் இருந்து, உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சிக்கு அவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) என்ற சிறப்புத் தூதரையும் நியமித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் உள்ள இராணுவ தளத்தில் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
"சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்ற பெயரில் 2022 பிப்ரவரி 24இல் ரஷ்யா தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதல்கள் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.