உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரெடி! இறங்கி வந்த புதின்! அடுத்து என்ன நடக்கும்?
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Putin Ready for Direct Talks with Ukraine
உக்ரைனுடன் 'நேரடிப் பேச்சுவார்த்தை' நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புதின் ரெடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் "நேரடிப் பேச்சுவார்த்தை" நடத்த முன்மொழிந்துள்ளார். "முன்பு நடத்தப்பட்டு, பின்னர் தடைபட்ட பேச்சுவார்த்தையை மே 15 அன்று உடனடியாகத் தொடங்க விரும்புகிறோம்" என்று புதின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். CNN செய்தியின்படி, பேச்சுவார்த்தைகள் "எந்தவித முன்நிபந்தனைகளும் இல்லாமல்" நடத்தப்பட வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தலைவர்கள் வேண்டுகோள்
"உக்ரைனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று புதின் கூறினார். மேலும், அவை "மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும்" "நீண்டகால, நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும்" நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். CNNன்படி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் போலந்து தலைவர்கள் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு புதினை வலியுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த முன்மொழிவு வந்தது.
நிபந்தனை விதித்த புதின்
2022 இல் போர் தொடங்கியது முதல் உக்ரைனும் ரஷ்யாவும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேசுவேன் என்று புதின் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகள் "நீண்டகால நிலையான அமைதிக்கான முதல் படியே தவிர, உக்ரைன் ஆயுதப் படைகளை மீண்டும் ஆயுதபாணியாக்கி, புதிய கோட்டைகளில் அகழிகள் தோண்டிய பின்னர் ஆயுத மோதலைத் தொடர்வதற்கான முன்னுரை அல்ல" என்று புதின் கூறியதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
முன்னதாக வியாழக்கிழமை, Truth Social இல் வெளியிட்ட பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "போர் நிறுத்தம் மதிக்கப்படாவிட்டால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேலும் தடைகளை விதிப்பார்கள்" என்று கூறினார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை அமெரிக்க அதிபர் தனது முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளார். டிரம்ப் ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே பல உயர்மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.