கூகுள் ஊழியர்களுக்கு வேட்டு! AI முதலீட்டுக்காக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை!
கூகுள் அதன் மக்கள் செயல்பாடுகள் மற்றும் கிளவுட் துறைகளில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கிறது. கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதுதான் ஆட்குறைப்புக்குக் காரணம் என்றும் சிஎன்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் மனிதவள செயல்பாடுகளை மேற்பார்வையிடும் மக்கள் செயல்பாட்டுப் பிரிவில் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என சிஎன்பிசி அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கப்படும் இந்தத் திட்டம், நடுத்தர நிலை முதல் மூத்த நிலை வரை உள்ள ஊழியர்கள் (நிலைகள் 4 மற்றும் 5) பணிநீக்க இழப்பீடுகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த பேக்கேஜில் 14 வாரங்களுக்கான சம்பளம் வழங்கப்படும். இத்துடன், பணிபுரிந்த ஆண்டுகள் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு ஒரு வாரச் சம்பளம் வீதம் போனஸ் தொகையும் கணக்கிட்டுக் கொடுக்கப்படும்.
Google layoffs
கூகுள் நிறுவனம் AI உள்கட்டமைப்பில் கணிசமான செலவுகளைச் செய்த போதிலும், செலவுகளைக் குறைக்க அதன் நிதித் தலைவர் அனாத் அஷ்கெனாசி மேற்கொண்ட பெரிய முயற்சியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் செலவுத் திறனை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்று அஷ்கெனாசி சமீபத்தில் கூறியிருக்கிறார்.
குறிப்பாக AI தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு முக்கியக் காரணம். நான்காவது காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததை விட பலவீனமான இருந்தாலும், AI திறன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் கூகுள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
Artificial intelligence
மக்கள் செயல்பாடுகள் பிரிவில் மட்டுமின்றி, கூகுள் கிளவுட் பிரிவிலும் பணிநீக்கம் நடைபெற உள்ளது. செயல்பாட்டு ஆதரவில் பல குழுக்களை கூகுள் நிறுவனம் குறைத்துள்ளது. இது தவிர சில பணிகளை இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்கு இடமாற்றம் செய்து வருகிறது.
உலகளாவிய பணியாளர்களை மேம்படுத்துவதற்கும் செயல்பாட்டு செயல்திறனை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கிளவுட் சந்தையில் நிலவும் போட்டிக்கு ஈடுகொக்கவும் கூகுள் பாடுபடுகிறது.
AI tools
கூகுளின் மிகவும் லாபகரமான வணிகப் பிரிவுகளில் ஒன்றாக இருக்கும் கிளவுட் பிரிவு, நான்காவது காலாண்டில் 30 சதவீத வருவாய் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இருப்பினும், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் ஆகியவற்றில் கூகுள் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இதனால், நிறுவனத்தின் பணியாளர் உத்தியைத் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யவேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அதன் வழக்கமான வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விற்பனை மற்றும் பொறியியல் பிரிவுகளில் புதிய பணியமர்த்தல் தொடரும் நிலையில், ஆட்குறைப்பு மிகக் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Artificial intelligence
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதாக கூகுள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நிறுவனத்திற்குள் புதிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகளை வழங்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கெனவே கூகுளில் ஆட்குறைப்பு நடைபெற்றது. அதற்குப் பிறகு மீண்டும் பணநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.