வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ந்தவுடன் 90 லட்சம் அபேஸ்! முதலீட்டாளர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!
WhatsApp group Investment scam: ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ. 90 லட்சம் இழந்துள்ளார். இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் SEBI பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
WhatsApp Group
ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான 73 வயதான சசிதரன் நம்பியார், டிசம்பர் 2024 இல் “ஆதித்யா பிர்லா ஈக்விட்டி லேர்னிங்” என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்தார். இது ஷேர் மார்க்கெட் டிரேடிங் ஆர்வலர்களின் குழு என்று நம்பி சேர்ந்தார். மும்பையை தளமாகக் கொண்ட ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட்டின் குழுவாக இது இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கலாம்.
Investment fraud
குழுவின் உறுப்பினர்கள் முதலீட்டில் 850 சதவீதம் லாபம் உறுதி என்று கூறியதைக் கண்டு, டிசம்பர் 30க்குள் ரூ. 90 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தார். இருப்பினும், முதலீடு செய்த பணம் திரும்ப வராததால், பெரிய மோசடியில் சிக்கியதை உணர்ந்த நீதிபதி ஜனவரி 5ஆம் தேதி திரிபுனித்துரா ஹில் பேலஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
WhatsApp group scam
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) கூற்றுப்படி , 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டு மோசடிகளில் இந்தியர்கள் ரூ. 120 கோடிக்கு மேல் இழந்துள்ளனர். 2023ஆம் ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. 81,000 க்கும் மேற்பட்ட போலி முதலீட்டுக் குழுக்கள் வாட்ஸ்அப்பில் இயங்கி வருகின்றன.
WhatsApp Investment scam
மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை வளர்த்து அவர்களை போலியான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுகிறார்கள். பெரும்பாலும் ஆபத்து ஏதும் இல்லாமல் அதிக வருவாயை ஈட்ட முடியும் என்று வாக்குறுதி அளித்து பணத்தைப் பறிக்கின்றனர்.
WhatsApp scam
உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உண்மையானதாகத் தோன்றும் சலுகைகளை அப்படியே நம்பிவிடக் கூடாது. ஆன்லைனில் அறிமுகமானவர்களுக்கு பணத்தை அனுப்பவதைத் தவிர்க்க வேண்டும். SEBI இல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் திட்டங்களைச் சரிபார்க்க வேண்டும்.
Cybercrime Complaint
சந்தேகத்திற்கிடமான வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுக்களில் இருந்து வெளியேறி அவற்றைப் பற்றிப் புகார் அளிக்கலாம். மற்றவர்களும் மோசடிகளில் சிக்காமல் இருக்க இது உதவியாக இருக்கும். https://sancharsaathi.gov.in/ என்ற அதிகாரபூர்வ ஆன்லைன் போர்ட்டலில் புகார்களைப் பதிவுசெய்யலாம். நீங்கள் மோசடிக்கு ஆளானால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் அளிப்பதற்கான https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் மூலமாகவும் புகார் கொடுக்கலாம்.