குறைந்த கட்டணத்தில் லட்சத்தீவை சுற்றிப்பார்க்கலாம்.! எப்படி தெரியுமா.?
மாலத்தீவை மிஞ்சும் அழகான லட்சத்தீவிற்கு செல்ல திட்டமிடுகிறீர்களா? சென்னையில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி, எங்கு தங்குவது, செலவு எவ்வளவு ஆகும், போன்ற தகவல்கள் இங்கே.
வெள்ளை மண் கடலும்- மாலை நேர கொண்டாட்டமும்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இதற்கு ஈடு கொடுக்க மனிதர்களும் படு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி வருடக்கணக்கில் ஓடும் மக்கள் ஓய்வு கிடைக்காதா.? இயற்கையை ரசிக்க வாய்ப்பு கிடைக்காதா என தினந்தோறும் ஏங்கி தவிக்கிறார்கள். அந்த வகையில் மலையும் அருவியை சார்ந்த பகுதிகளுக்கும், குளுமையான மலைப்பகுதிகளுக்கும் மக்கள் சென்று வருகிறார்கள். அடுத்ததாக இயற்கையின் மிகப்பெரிய வரம் கடல், கடலின் அழகை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க முடியும், மாலை நேரத்தில் சூரியன் மங்கும் நேரத்தில் கடற்கரை ஓரத்தில் அமர்ந்து அலைகளை ரசிப்பது மனதிற்கு அமைதியை கொடுக்கும், அப்படிப்பட்ட கடல்கள் தமிழகத்தில் ஏராளமாக இருந்தாலும் வெள்ளை நிற மணலோடு ஆழகாக காட்சி அளிக்கும் இடம் தான் லட்சத்தீவு, மாலத்தீவிற்கு போட்டி போடும் ஒரே இடம் லட்சத்தீவு,
லட்சத்தீவில் சீசன் எப்போது.?
அந்த வகையில் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரை லட்சத்தீவில் சீசன். எனவே லட்சத்தீவிற்கு செல்ல ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். லட்சத்தீவிற்கு எப்படி செல்லலாம், எந்த சீசனில் செல்லலாம், பயணம்செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். லட்சத்தீவு 36 சிறிய தீவுக் கூட்டங்கள் கொண்ட ஊராகும். இங்கு கவரட்டி, அகட்டி, ஆண்டோ, கல்பானி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா மற்றும் மினிகாய் ஆகிய அழகிய தீவுகள் உள்ளது. லட்சத்தீவிற்கு சென்னையில் இருந்து எப்படி போகலாம் என தற்போது பார்க்கலாம். அந்த வகையில் லட்சத்தீவிற்கு செல்ல திட்டமிட்டால் உடனடியாக இன்று புறப்பட்டு நாளைக்கு செல்ல முடியாது. முன்பாகவே திட்டமிட வேண்டும்.
முன் அனுமதி கட்டாயம்
குறைந்தது ஒரு மாத காலத்திற்கு முன்பாக, ஏனென்றால் லட்சத்தீவு பாதுகாக்கப்பட்ட பகுதி, இங்கு ஒரே நாளில் அதிகளவு மக்கள் குவிந்தால் சுற்றுலா தளம் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டே லட்சத்தீவு செல்வதற்கு கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும். https://epermit.utl.gov.in/ என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். அல்லது கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
இங்கு அனுமதி கிடைத்த பிறகே பயணிக்க முடியும். அனுமதி கிடைத்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதற்கான கட்டணமாக 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நேரடியாக லட்சத்தீவிற்கு செல்ல முடியாது.
Lakshadweep islands
கொச்சி டூ லட்சத்தீவு
சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் கொச்சிக்கு செல்ல வேண்டும். கொச்சியில் இருந்து தான் லட்சத்தீவிற்கு செல்ல வழிகள் உள்ளது. இரண்டு வழித்தடத்தில் பயணிக்கலாம். ஒன்று விமானம் மற்றொன்று கப்பபல், விமானம் மற்றும் கப்பல்கள் மூலமாக லட்சத்தீவில் உள்ள அகட்டி விமான நிலையத்தை சென்று சேர வேண்டும். விமானத்தை பொறுத்தவரை இண்டிகோ மற்றும் அலையன்ஸ் ஆகிய விமானங்களின் சேவை மட்டுமே உள்ளது. அதுவும் சிறிய அளவிலான விமானங்கள் மூலம் மட்டுமே பயணிக்க முடியும்.
ஏனென்றால் அகட்டி விமான நிலையம் மிகவும் சிறியது. இதனால் மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்குவது சாத்தியமில்லை. மேலும் விமானத்தின் மூலம் லட்சத்தீவிற்கு பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். கொச்சியில் இருந்து லட்சத்தீவு 440 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒருவருக்கு குறைந்தபட்ச கட்டணமாக 5500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
விமானம், கப்பல் பயணம்
இந்த கட்டணமும் முன்கூட்டியே திட்டமிட்டு ரிசர்வேஷன் செய்யும் பயணிகளுக்கு கிடைக்கும். கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனையடுத்து கப்பல் மூலமாகவும் கொச்சியில் இருந்து லட்சத்தீவில் உள்ள அகட்டிக்கு செல்ல முடியும். எம்வி அரேபியன் சி,எம்வி லகூன், எம்பி லக்ஷ்வதீப் சி, எம்வி கோரல்ஸ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கப்பல்கள் இயக்கப்படுகிறது. கப்பல் மூலம் லட்சத்தீவிற்கு சென்று சேர குறைந்தது 16 முதல் 18 மணி நேரம் ஆகும். கடலை ரசித்த படி செல்வதற்கு இந்த கப்பல் பயணம் சிறந்தது. அதே நேரத்தில் கப்பல் பயணத்தால் உடலில் பிரச்சனை ஏற்படும் என நினைப்பவர்கள் இதனை தவிர்க்கலாம்.
தங்கும் விடுதிகள்
லட்சத்தீவை பொறுத்தவரை சிறிய தீவாகும். இங்கு குறைந்த அளவிலான விடுதிகள் மற்றும் வீடுகள் உள்ளது. இங்கு இரண்டு வழிகளில் தங்கலாம் ஒன்று பீச் ரெசார்ட் மற்றொன்று அங்குள்ள மக்கள் தங்களது வீடுகளை வாடகைக்கு விடுவது, இதில் கட்டணம் என்று பார்க்கும் பொழுது 3500 ரூபாய் முதல் 4000 வரை ஒரு நாள் வாடகையையாக வசூலிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் பீச் ரெசார்ட்டில் தங்க விரும்புபவர்களுக்கு கட்டணமாக 10ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது. இதுமுட்டுமில்லாமல் அங்கு சாதாரண ஓட்டலில் சாப்பிட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஒரு நபருக்கு செலவாகும். அடுத்தாக கடல் விளையாட்டுகள் நிறைய உள்ளது.
கடல் விளையாட்டுக்கள்
ஸ்கூபா டிரைவிங், பனானா ரெய்டு என பல சாகச விளையாட்டுக்களும் உள்ளது. இதில் விளையாடும் விளையாட்டை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 5ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படும்.
கட்டணம் எவ்வளவு
3 இரவுடன் சேர்த்து 4நாட்கள் சென்னையில் இருந்து லட்சத்தீவு செல்ல ஒரு நபருக்கு பொருத்தவரை 25 ஆயிரம் ரூபாய் முதல் 30ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படும். உத்தேசமாக விமான கட்டணம் கொச்சியில் இருந்து இரு வழித்தடத்தில் 11ஆயிரம் ரூபாய், தங்கும் விடுதி 10,500 ரூபாய், உணவு 3500 ரூபாய், கடற்கரை விளையாட்டு 4000ஆயிரம் என செலவு ஏற்படும். அதே நேரத்தில் அரசின் சுற்றுலா நிறுவனம் அல்லது தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தப்படும் பேக்ஜேக் மூலம் பயணித்தால் இதைவிட சற்று குறைவான கட்டத்தில் லட்சத்தீவிற்கு பயணம் செய்ய முடியும்.