- Home
- Tamil Nadu News
- பெண் தொழில்முனைவோருக்கு ஜாக்பாட்: ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்... தமிழக அரசின் 'வெற்றி மகளிர் திட்டம்' பற்றி தெரியுமா?
பெண் தொழில்முனைவோருக்கு ஜாக்பாட்: ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்... தமிழக அரசின் 'வெற்றி மகளிர் திட்டம்' பற்றி தெரியுமா?
தமிழக அரசின் ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) வாயிலாக ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவியைப் பெற முடியும்.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
பெண்கள் புதிதாகத் தொழில் தொடங்கவும் அல்லது தற்போது நடத்தி வரும் தொழிலை நிறுவனக் கடன்கள் மூலம் விரிவாக்கம் செய்யவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. பெண்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரப் பங்களிப்பை விரிவுபடுத்துவதுடன், அவர்களின் தொழில் லட்சியங்களை லாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்குத் தேவையான மூலதனம் மற்றும் நிறுவன ஆதரவை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
கடனுதவியின் முக்கிய அம்சங்கள்
தகுதியான பெண் தொழில்முனைவோருக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்திற்கென தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தபட்ச நிலுவைத் தொகையின் அடிப்படையில் (Diminishing balance basis) ஆண்டுக்கு 9.95% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; மேலும் வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. பெறப்பட்ட கடன் தொகையை 9 ஆண்டுகள் வரையிலான காலத்திற்குள் திருப்பிச் செலுத்த முடியும்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தொகுதிக்கு 10 திறமையான மற்றும் சுயதொழில் தொடங்கும் ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோரை அடையாளம் கண்டு, அவர்களின் விவரங்களைத் தொழில் துறைக்குச் சமர்ப்பிக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழில் துறை அந்த விவரங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்வு செய்து கடனுதவி வழங்கும்.
தொழில் துறை அமைச்சர் விளக்கம்
இதுகுறித்துத் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மூலதன வசதி இல்லாததே பெரும்பாலும் பெண்கள் தங்கள் தொழில் யோசனைகளைச் சிறந்த தொழில்களாக மாற்றுவதைத் தடுக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான திறனும் மன உறுதியும் இருந்தும், முதலீடு பெறுவதே தடையாக உள்ளது.
இத்திட்டத்தின் வாய்ப்புகள் முக்கிய நகரங்கள் அல்லது தொழில் மையங்களுக்கு மட்டுமே கட்டுப்படாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்களைச் சென்றடைவதே அரசின் இலக்கு. பெண்கள் கடன் பெறுவதோடு நின்றுவிடாமல், தொழில்முனைவோராகவும், வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

