- Home
- Tamil Nadu News
- விஜய் பாணியில் அடுத்த முதல்வராகிறாரா திருமாவளவன்? இணையத்தை அதிரவைக்கும் TN 07 CM 2031 டெஸ்லா கார்!
விஜய் பாணியில் அடுத்த முதல்வராகிறாரா திருமாவளவன்? இணையத்தை அதிரவைக்கும் TN 07 CM 2031 டெஸ்லா கார்!
விஜய் படத்தில் வந்த CM 2026 நிஜத்தில் முதல்வரானதைப்போல, விசிக தலைவர் திருமாவளவன் TN 07 CM 2031 என்ற டெஸ்லா காரில் வலம் வந்துள்ளார். தவெக ஆட்சி கூட்டணியில் அங்கம் வகித்தாலும், 2031-ல் அவரே அடுத்த முதல்வர் என விசிகவினர் அதிரடியாகக் களமிறங்கியுள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில், தனியார் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி, படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருகை தந்தபோது, அவர் வந்திறங்கிய நவீன டெஸ்லா காரின் நம்பர் பிளேட்டைப் பார்த்த அங்கிருந்த பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் சற்றே மிரண்டு போயினர்.
அந்தக் காரின் அதிகாரப்பூர்வப் பதிவெண் "TN 07 CM 2031" என்று அச்சிடப்பட்டிருந்ததுதான் இந்தத் தீவிரக் கவனத்திற்கும் பரபரப்பிற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படத்தில் "TN 07 CM 2026" என்ற நம்பர் பிளேட் கொண்ட கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சினிமாவில் இடம்பெற்ற அதே பாணியில், தற்போது 2026-ல் விஜய் நிஜமாகவே தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். திரையில் காட்டியது நிஜமானதைப் போல், தற்போது திருமாவளவன் காரில் உள்ள பதிவெண்ணும் அதேபோன்றதொரு வரலாற்று நகர்வை உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது.
காரின் பதிவெண்ணில் உள்ள 'CM' என்ற எழுத்துக்கள் முதலமைச்சரையும் '2031' என்ற எண் வருடாந்திர இலக்கையும் குறிப்பதாகப் புரிந்து கொண்ட தொண்டர்களும் பொதுமக்களும், உடனடியாக அதனைத் தங்களது செல்போன்களில் புகைப்படம், வீடியோவாகப் பதிவு செய்தனர். அடுத்த சில நிமிடங்களிலேயே X, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களில் இந்தப் பதிவுகள் புயல் வேகத்தில் பரவி பான்-இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன. 2031-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன்தான் அடுத்த முதலமைச்சர் என்ற அரசியல் இலக்கோடு, திட்டமிட்டு இந்தப் பதிவெண் வாங்கப்பட்டுள்ளதாக விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமிதத்துடன் முழக்கமிட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அக்கூட்டணியிலிருந்து விலகிய விசிக, பின்னர் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக நின்று ஆதரவளித்ததோடு, அமைச்சரவையிலும் முக்கியப் பங்கைப் பெற்றது. அண்மையில் செப்டம்பர் 9-ஆம் தேதி பனையூர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இம்மாதத் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யில் விசிக இணைந்தது. காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டணி முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
த.வெ.க, வி.சி.க இடையே ஆழமான அரசியல் இணக்கமும் அதிகாரப் பகிர்வும் நிலவி வரும் சூழலில், "TN 07 CM 2031" என்ற அதிரடியான பதிவெண் கொண்ட சொகுசு காரில் திருமாவளவன் வலம் வந்திருப்பது மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு விசிக தனது எதிர்கால அரசியல் தலைமைக்கான இலக்கை இப்போதே வெளிப்படையாக முன்வைக்கத் தொடங்கிவிட்டதா என்ற விவாதப் புயலையும் புதிய பேசுபொருளையும் இது கிளப்பியுள்ளது.

