- Home
- Tamil Nadu News
- Thevar Guru Pooja : தேவர் குருபூஜை ஏன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது? வரலாறும், பின்னணியும்!
Thevar Guru Pooja : தேவர் குருபூஜை ஏன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது? வரலாறும், பின்னணியும்!
Thevar Guru Pooja : அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் லட்சக்கணக்கானோர் திரள்வது ஏன்? முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை, சுதந்திரப் போராட்டம், அரசியல் பங்களிப்பு மற்றும் குருபூஜையின் பின்னணியைப் பார்ப்போம்.

அக்டோபர் 30-ல் பசும்பொன்னில் திரளும் மக்கள்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகளில் ஒன்று தேவர் குருபூஜை. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மரியாதை செலுத்துகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆனால், முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளும் நினைவு நாளும் ஒரே தேதியில் அமைந்தது எப்படி? அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்ன? தேவர் குருபூஜை இவ்வளவு பெரிய மக்கள் நிகழ்வாக மாறியதன் பின்னணி என்ன?
இதையும் படிங்க : Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
யார் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை உக்கிரபாண்டியத் தேவர் மற்றும் தாயார் இந்திராணி அம்மையார் ஆவர். இளம் வயதிலேயே அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், பின்னர் தேர்தல் அரசியலிலும் முக்கியப் பங்காற்றினார். நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறையும், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் தலைவர் மட்டுமின்றி, தொழிலாளர் நலன், விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளிலும் செயல்பட்டார்.
இதையும் படிங்க : Numerology : உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? நீங்கள் பிறந்த மாதமே சொல்லும் ரகசியம்!
நேதாஜியுடன் ஏற்பட்ட அரசியல் தொடர்பு!
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாழ்க்கையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடனான தொடர்பு முக்கியமானது. 1939-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டியில் நேதாஜிக்கு தேவர் ஆதரவு அளித்தார். பின்னர் நேதாஜி தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். தமிழகத்தில் அக்கட்சியை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். 1948-ம் ஆண்டு பார்வர்டு பிளாக்கின் தமிழகப் பிரிவுத் தலைவரானார். 1955-ம் ஆண்டு கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். நேதாஜியின் அரசியல் கொள்கைகளுடன் கொண்டிருந்த நெருக்கம், தேவரின் அரசியல் அடையாளத்தில் முக்கிய இடம் பெற்றது.
இதையும் படிங்க : Silk Saree : பட்டுப் புடவையின் ஜரிகையில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும்? கணக்கு இதோ!
குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்!
முத்துராமலிங்கத் தேவரின் பெயர் தமிழக வரலாற்றில் முக்கியமாக இடம்பெறுவதற்கு ஒரு காரணம், குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டம். ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சமூகங்கள் குற்றப் பரம்பரையினர் என வகைப்படுத்தப்பட்டன. இதனால் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக, அவர்களின் நடமாட்டத்துக்கும் சுதந்திரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தேவர் கிராமம் கிராமமாகச் சென்று ஆதரவு திரட்டினார்; போராட்டங்களையும் நடத்தினார். இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான தொடர் முயற்சிகளில் அவர் முக்கியப் பங்காற்றினார். 1946-ம் ஆண்டில் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Kitchen Tips : புதுப் பாத்திரத்தில் ஸ்டிக்கரை நீக்கியும் பிசுபிசுப்பா இருக்கா? இந்த 5 எளிய வழிகளை முயற்சி பண்ணுங்க!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஆதரவு!
சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் முத்துராமலிங்கத் தேவர் பங்களித்துள்ளார். 1939-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் அவர் ஆதரவு அளித்தார். அப்போது சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில், சுதந்திரப் போராட்ட வீரரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஏ. வைத்தியநாத ஐயர் முன்னெடுத்த முயற்சிக்கு தேவர் துணை நின்றார். 1939 ஜூலை 8-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வில் அவரது ஆதரவும் இடம்பெற்றது. இதனுடன் தொழிலாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.
இதையும் படிங்க : சென்னையிலிருந்து 8 மணி நேர பயணத்தில் இப்படியொரு இடமா? பூமிக்கு அடியில் 150 அடி ஆழத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்!
பிறந்தநாளும் நினைவு நாளும் ஒரே தேதியில்!
முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி. அவர் மறைந்ததும் 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதிதான். பிறந்தநாளும் நினைவு நாளும் ஒரே நாளில் அமைந்ததால், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் இணைந்து அனுசரிக்கப்படுகிறது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்கள் திரண்டு மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்வு தேவர் ஜெயந்தி என்றும் குருபூஜை என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இது ஒரு பெரிய மக்கள் நிகழ்வாக வளர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசும் இந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது.
இதையும் படிங்க : Top 7 SUV Cars : 29 கி.மீ மைலேஜ் முதல் 100 கி.மீ வேகத்தை 9 நொடிகளில் எட்டும் திறன் வரை... டாப் 7 SUV கார்கள்!
தென் தமிழக அரசியலில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
தேவர் குருபூஜை என்பது ஒரு நினைவேந்தல் நிகழ்வாக மட்டுமல்லாமல், தென் தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் சூழலிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முத்துராமலிங்கத் தேவரைத் தங்கள் வரலாற்று மற்றும் சமூக அடையாளத்தின் முக்கியமான தலைவராகக் கருதும் மக்கள் பெருமளவில் இதில் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பசும்பொன்னுக்குச் சென்று மரியாதை செலுத்துகின்றனர். தென் தமிழகத்தில் தேவரின் சமூகச் செல்வாக்கும், தேர்தல் அரசியலில் அந்தப் பகுதியின் முக்கியத்துவமும் இந்த நிகழ்வுக்கு அரசியல் கவனத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் மக்கள் திரளும் முக்கிய இடமாக மாறுகிறது. தேவர் குருபூஜையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள அவரது அரசியல் பங்களிப்பையும், சமூகப் பின்னணியையும் இணைத்துப் பார்ப்பது அவசியம்.
இதையும் படிங்க : Hospital Bill : கட்டணங்களை வெளியிடப் போகும் மருத்துவமனைகள்? இனி சிகிச்சைக்கு முன்பே தெரிஞ்சுக்கலாமா?





