- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்
தமிழக அரசு 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லேப்டாப்பின் விலை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே என கணக்கிடப்பட்டுள்ளதால், தரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

Tamil Nadu laptop scheme : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வரும் இந்த வேளையில், தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பச் சாதனங்களை வழங்கிடத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
மாணவர்களுக்கு மடிக்கணினி
எனவே இத்திட்டத்திற்காக 2025-26 ஆம் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அந்த வகையில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க 2ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டால் ஒரு மடிக்கணினி விலை 10ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே 10ஆயிரம் ரூபாய்க்கு தரமான லேப்டாப் எப்படி வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 ஆயிரம் ரூபாய் லேப்டாப்
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரைவையில் அதிமுகவும் இதே பிரச்சனையை எழுப்பியது. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள லேப்டாப் எப்படி தரமாக வழங்க முடியும், 10ஆயிரம் விலையில் புதிய தொழில் நுட்பத்தோடு எப்படி கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆண்டுக்கு 2ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அதனால் மடிக்கணினி விலை 20 ஆயிரம் ரூபாய் இருக்கும். எனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அவர்கள் தரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு எவ்வளவு.?
மேலும் லேப்டாப் திட்டத்திற்கு இந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே சராசரியாக ஒரு மடிக்கணி 20ஆயிரம் ரூபாய் என்பது அடிப்டையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.