- Home
- Tamil Nadu News
- Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!
Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!
Thalai Deepavali : திருமணமான புதுமணத் தம்பதிகளின் தலை தீபாவளியில் பின்பற்றப்படும் மரபுகள், மாப்பிள்ளை சீர் வரிசை, புத்தாடைகள், எண்ணெய் குளியல், பாரம்பரிய விருந்து உள்ளிட்ட சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தலை தீபாவளி 2026
திருமண வாழ்க்கையின் முதல் தீபாவளி. அன்பும் பாசமும் பரிசுகளும் பலகாரங்களும் ஒன்றாகக் கைகோக்கும் மறக்க முடியாத திருநாள். திருமணத்துக்குப் பிறகு மகள் தனது கணவருடன் பிறந்த வீட்டுக்கு வந்து கொண்டாடும் முதல் தீபாவளி, தமிழர் மரபில் ‘தலை தீபாவளி’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது முதல் புத்தாடை அணிவித்து ஆசீர்வதிப்பது வரை ஒவ்வொரு சடங்கிலும் ஒரு தனி அர்த்தம் ஒளிந்திருக்கிறது.
மாப்பிள்ளைக்கு என்ன சீர் கொடுக்க வேண்டும்? புதுமணத் தம்பதிகள் அதிகாலையில் என்ன செய்ய வேண்டும்? தீபாவளி பலகாரங்கள், விருந்து, புத்தாடைகள் என இந்தப் பண்டிகையைச் சிறப்பாக்கும் மரபுகள் என்னென்ன? முதல் தீபாவளியை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் இனிய அனுபவமாக மாற்ற, தமிழர் பாரம்பரியம் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
தீபாவளி 2026 எப்போது?
தமிழ்நாட்டில் தீபாவளி நவம்பர் 8 ஆம் தேதி (ஐப்பசி 22) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் திருமணத்துக்குப் பிறகு முதல் தீபாவளியைக் கொண்டாடும் தம்பதிகளுக்கு, அன்றைய தினமே தலை தீபாவளியாக அமையும்.
தலை தீபாவளி என்றால் என்ன?
திருமணத்துக்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளியே தலை தீபாவளி எனப்படுகிறது. தமிழ்நாட்டின் பல குடும்பங்களில், இந்த நாளை மணமகளின் பிறந்த வீட்டில் கொண்டாடுவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகு மகள் புதிய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியிருந்தாலும், பிறந்த வீட்டுடனான அவளது பாசப்பிணைப்பு தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்பதை இந்த மரபு உணர்த்துகிறது. அதேபோல், மருமகனைத் தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக அன்புடன் வரவேற்று உபசரிக்கும் நாளாகவும் இது அமைகிறது.
குறிப்பு : தலை தீபாவளி கொண்டாடும் விதம் ஊருக்கு ஊர், குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடலாம். எனவே, எல்லா குடும்பங்களும் ஒரே சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
தலை தீபாவளியின் முதல் மரியாதை
மாப்பிள்ளை அழைப்பு
தலை தீபாவளிக்கான கொண்டாட்டம் பண்டிகை நாளில் மட்டுமே தொடங்குவதில்லை. அதற்கு முன்பே மாப்பிள்ளையையும் அவரது குடும்பத்தினரையும் அழைப்பது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது.
- பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று நேரில் அழைப்பு விடுப்பார்கள்.
- வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூக்கள், இனிப்புகள் ஆகியவற்றைத் தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுப்பார்கள்.
- மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் தேவையான புத்தாடைகள், பரிசுகள், பலகாரங்கள் ஆகியவற்றைத் தயார் செய்வார்கள்.
- மாப்பிள்ளையின் பெற்றோரும் பண்டிகையில் கலந்துகொள்ள விரும்பினால், அவர்களையும் அன்புடன் அழைப்பார்கள்.
இங்கு முக்கியமானது ஆடம்பரமோ, செலவோ அல்ல. இரு குடும்பங்களும் அன்புடன் ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான்.
என்னென்ன கொடுப்பார்கள்?
தலை தீபாவளி சீர் வரிசை
தீபாவளி வரிசை என்றால் என்ன?
ததலை ல தீபாவளியைக் கொண்டாடும் மகள் மற்றும் மருமகனுக்குப் பெண் வீட்டார் அன்புடன் வழங்கும் புத்தாடைகள், பரிசுகள், இனிப்பு-கார வகைகள் உள்ளிட்டவற்றைத் தீபாவளி சீர் அல்லது தீபாவளி வரிசை என்று குறிப்பிடுவார்கள்.
எந்தெந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குடும்ப வழக்கம், பகுதி, பொருளாதார வசதி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
பொதுவாக வழங்கப்படக்கூடிய பொருட்கள்
- புத்தாடைகள்- மகளுக்கும், மாப்பிள்ளைக்கு புத்தாடைகள் வழங்குவது வழக்கம்.
- வெள்ளிப் பொருட்கள் மற்றும் பரிசுகள் - சில குடும்பங்களில் வெள்ளித் தட்டு, டம்ளர், கிண்ணம், வெள்ளி நாணயம், விளக்கு அல்லது நகைகள் வழங்கப்படுகின்றன. இவை கட்டாயமானவை அல்ல.
- இனிப்பு, கார பலகாரங்கள் - அதிரசம், முறுக்கு, தேன்குழல், சீடை, லட்டு, மைசூர்பாகு உள்ளிட்ட பலகாரங்களைத் தயாரித்து வழங்குவார்கள்.
- பழங்கள், தேங்காய், தாம்பூலம - பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களையும் குடும்ப வழக்கப்படி சேர்த்துக் கொடுப்பார்கள்.
வரிசையாக என்ன செய்ய வேண்டும்?
தலை தீபாவளி கொண்டாடும் முறை
அதிகாலை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் - குடும்பத்தின் மூத்தவர்கள் அல்லது பெற்றோர், மணமக்கள் இருவருக்கும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடச் செய்வார்கள். இது தீபாவளியின் முக்கியமான பாரம்பரியச் சடங்குகளில் ஒன்று. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் புனிதமான கங்கா ஸ்நானமாகக் கருதும் நம்பிக்கை உள்ளது.
குளித்த பிறகு புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள். அதன்பின்னர் இனிப்பு வகைகளைச் சுவைத்து கொண்டாட்டத்தைத் தொடங்குவார்கள்.
உறவினர்களுடன் மகிழ்ச்சி
முதல் பட்டாசு - இணைந்து கொண்டாடுதல்
மணமக்கள் இருவரும் சேர்ந்து பட்டாசு அல்லது மத்தாப்பு கொளுத்தி மகிழ்வது சில குடும்பங்களில் சிறப்பு நிகழ்வாக இருக்கும்.
மதிய விருந்து - உறவினர்களுடன் மகிழ்ச்சி
தலைவாழை இலையில் விருந்து பரிமாறி, மணமக்களுக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்து உபசரிப்பார்கள். உறவினர்கள் வந்து வாழ்த்துவதும் இந்த நாளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
தலை தீபாவளி விருந்தில் என்னென்ன உணவுகள் இடம்பெறும்?
தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசும் நினைவுக்கு வருவது போல, தலை தீபாவளி என்றால் மாப்பிள்ளைக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு விருந்தும் நினைவுக்கு வரும். வீட்டின் வழக்கத்தைப் பொறுத்து சைவம் அல்லது அசைவ உணவுகள் பரிமாறப்படலாம்.
- இட்லி, தோசை, பொங்கல் போன்ற காலை உணவுகள்.
- சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, அப்பளம் உள்ளிட்ட மதிய உணவு வகைகள்.
- குடும்ப வழக்கத்துக்கு ஏற்ப சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகள்.
- அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்பாகு போன்ற பாரம்பரிய இனிப்பு மற்றும் கார பலகாரங்கள்.
தலை தீபாவளியின் உண்மையான சிறப்பு என்ன?
தலை தீபாவளி என்பது சீர் வரிசை, நகைகள், புத்தாடைகள் எனப் பொருட்களால் மட்டுமே அளவிடப்படும் பண்டிகை அல்ல. திருமணத்துக்குப் பிறகு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் தம்பதிகளுக்கு இரு குடும்பங்களும் ஆதரவாக இருப்பதை உணர்த்தும் ஒரு மகிழ்ச்சியான தருணம்.
மகளின் மகிழ்ச்சியையும் மருமகனின் விருப்பத்தையும் மதித்து, இரு குடும்பங்களும் மனம்விட்டுப் பழகுவதற்கான வாய்ப்பாக இந்த நாளைப் பயன்படுத்தலாம். பாரம்பரியச் சடங்குகளை விருப்பத்துக்கு ஏற்ப பின்பற்றுவதோடு, புதிய தலைமுறையின் எண்ணங்களுக்கும் இடமளிப்பது இந்த மரபை அடுத்த தலைமுறைக்கும் இனிமையாகக் கொண்டு செல்ல உதவும்.
முடிவாக, 2026 நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் தலை தீபாவளியை, புதுமணத் தம்பதிகள் அன்பு, ஆசீர்வாதம், பாரம்பரிய உணவுகள், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றுடன் கொண்டாடத் திட்டமிடலாம். முதல் தீபாவளியில் கிடைக்கும் விலைமதிப்பற்ற பரிசு, இரு குடும்பங்களின் அன்பும் வாழ்த்துகளும்தான்.

