- Home
- Tamil Nadu News
- TN budget : புதுப்புது அறிவிப்புகளை அள்ளிக்கொடுக்கப்போகுது அரசு- தமிழக பட்ஜெட் எப்போது.! வெளியான தேதி
TN budget : புதுப்புது அறிவிப்புகளை அள்ளிக்கொடுக்கப்போகுது அரசு- தமிழக பட்ஜெட் எப்போது.! வெளியான தேதி
2021-ல் ஆட்சியைப் பிடித்த திமுக, மூன்று பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளது. நான்காவது பட்ஜெட் மார்ச் மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதிச் சுமை மற்றும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலானதாக இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசை 10 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது திமுக, 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியிருந்தபடி மகளிருக்கு விலையில்லா பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.
திமுக அரசின் இறுதி முழு பட்ஜெட்
இதே போல கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை 3 முழு பட்ஜெட்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பட்ஜெட்டை தயாரித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பட்ஜெட் தொடர்பான தேதியை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் எப்போது.?
அதன் படி மார்ச் மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாகவும், மானிய கோரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாகவும் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நிதியை கொடுக்காத மத்திய அரசு
இதனிடையே திமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட் என்பதால் புதிய, புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் ஏற்கனவே நிதிச்சுமை உள்ள நிலையிலும், மத்திய அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையிலும், இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலான பட்ஜெட்டாக இருக்கும். தேர்தல் நடக்கவுள்ள 2026-ம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய முடியும் என்பதால்,
புதிய திட்டங்களுக்கு வாய்ப்பு.?
மக்களைக் கவரும் திட்டங்கள், இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும். எனவே இந்த பட்ஜெட்டை பற்றிய மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள், இந்த பட்ஜெட் மூலம் தீட்டப்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கான நிதியுதவியை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.