- Home
- Tamil Nadu News
- எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. இல்லைனா.. மாபெரும் போராட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்.. இல்லைனா.. மாபெரும் போராட்டம்.. அரசுக்கு எச்சரிக்கை
ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை டிடிவி.தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு
பல்வேறு குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என டிடிவி.தினகரன் அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊதியம் பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு – திமுகவின் தேர்தல் வாக்குறுதியான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
முதலமைச்சருக்கு கடிதம்
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை ரத்து செய்திட வேண்டும், பணி ஓய்வின் போது 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினை தொகுத்து வழங்க வேண்டும், பொது வருங்கால வைப்பு நிதித் தொகையின் அசலை வட்டியுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிப்பு
தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடும் சவலைக் குழந்தையாக இருப்பதாக விமர்சித்திருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டம்
அதோடு, புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்ட நாளில் தொடங்கி தற்போது வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு பேராசிரியடமிருந்தும் பிடித்தம் செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான தொகையை திருப்பித் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
எனவே, பல்வேறு குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

