- Home
- Tamil Nadu News
- LPG Price Hike: அதிகாலையிலேயே அதிர்ச்சி! சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு! பெட்ரோல், டீசல் விலையும் ஏறுமுகம்!
LPG Price Hike: அதிகாலையிலேயே அதிர்ச்சி! சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு! பெட்ரோல், டீசல் விலையும் ஏறுமுகம்!
LPG Price Hike: ஜூன் 1ஆம் தேதியான இன்று மக்களுக்கு அதிகாலையிலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்துள்ளது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு
உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக உள்நாட்டு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி விலையைத் தீர்மானிக்கின்றன. இவற்றுக்கு ஏற்ப இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் புதிய மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ம் தேதியான இன்று பெட்ரோல், டீசல் விலை மற்றும் வணிக எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு
அதாவது உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஒரே அடியாக 46 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வால், 1 வணிக சிலிண்டரின் விலை 3,283 ரூபாயை எட்டியுள்ளது. அதே வேளையில் சாமானிய மக்களுக்கு நிம்மதி தரும் வகையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு
வணிக சிலிண்டர் விலையை போன்று பெட்ரோல், டீசல் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து, புதிய விலையாக ஒரு லிட்டர் ரூ.107.87 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து இப்போது ரூ.99.65 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை பல முறை உயர்ந்துள்ளது.
தேர்தலுக்கு பிறகு விலை உயர்வு ஏறுமுகம்
தேர்தலுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அடுத்தடுத்து 4 முறைக்கும் மேலாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த மே 15 அன்று நீண்ட நாட்களுக்கு பிறகு லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை, அதன் தொடர்ச்சியாக மே 23 மற்றும் மே 25 ஆகிய தேதிகளிலும் தலா 2 ரூபாய்க்கும் மேல் எனத் தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்தது. ஒட்டுமொத்தமாக கடந்த மே மாத தொடக்கத்தில் 101 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, இந்த தொடர் மாற்றங்களால் லிட்டருக்கு சுமார் 6 ரூபாய் வரை உயர்ந்து தற்போது 107.87 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை உயர்ந்து 99.65 ரூபாயாகவும் உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வு தொர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை இன்னலுக்கு ஆழ்த்தியுள்ளது. இந்த தொடர் விலையேற்றம் காரணமாக லாரிகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உயரக்கூடும். மேலும், வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்திருப்பதால், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையும், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

