நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுங்கள்.!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு
அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வழக்கு- நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பரபரப்பான தீர்ப்பு வழங்குவதில் முக்கியமானவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தை ரத்து செய்தவர், அதிகாரமிக்க இடத்தில் இருந்து சவுக்கு சங்கர் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டாம் என்னிடம் கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தார். மேலும் இதன் காரணமாகவே இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்
இந்தநிலையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி தீர்ப்பு வழங்கியதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி. அவர் ஜீவ சமாதியான தினத்தை அவரது பக்தர்கள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
சாப்பிட்ட இழை மீது உருளும் பக்தர்கள்
இந்த விழாவை ஒட்டி நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் நடக்கும். இதனையடுத்து பக்தர்கள் சாப்பிட்ட பின் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வழிபடுகின்றனர். இந்த நிகழ்வுக்கு 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தடை விதித்தது.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையின் போது நீதிபதி சுவாமிநாதன், இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
தடையை நீக்கிய நீதிபதி
மேலும் சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவருக்கு ஆன்மீக பலனைத் தரும் என்ற நம்பிக்கை, அந்தத் தனிப்பட்ட நபரின் ஆன்மீகத் தேர்வு' என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மனித மாண்புக்கு எதிரானது
2015ஆம் ஆண்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் எஸ்.வேலுமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கரூர் மாவட்டம் நெரூரில் பக்தர்கள் எச்சில் இலைகளில் உருள்வதைத் தடை செய்தது. பிறர் உணவு உண்டபின் மீதியுள்ள வாழை இலையில் உருள்வது, மனித மாண்புக்கும் நாகரீக சமுதாயத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல...
இந்தநிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் வழங்கிய தீர்ப்பின் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கைக்கு உண்மையான நோக்கத்துக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.