- Home
- Tamil Nadu News
- க.காதலுக்காக தாலி கட்டிய கணவனை கொன்ற மனைவி.. எப்படி தெரியுமா? கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
க.காதலுக்காக தாலி கட்டிய கணவனை கொன்ற மனைவி.. எப்படி தெரியுமா? கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார். பின்னர் உடலை மயானத்தில் புதைத்த நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் மனைவி சரணடைந்தார்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜசேகர் (32). இவரது மனைவி இந்து சன்னி (25). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி அருகே உள்ள மத்தம் அக்ரஹாரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இந்து சன்னிக்கும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த லிண்டோ ஜோசப் (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ஜஸ்டின் ராஜசேகருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் சந்திக்க முடியாமல் ஏக்கத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ஜஸ்டின் ராஜசேகரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில், திட்டமிட்டபடி இந்து சன்னியும், லிண்டோ ஜோசப்பும் இணைந்து ஜஸ்டின் ராஜசேகரை அவரது வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்தனர்.
பின்னர், யாருக்கும் தெரியாமல் அவரது உடலை மத்திகிரி மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைத்தனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர் முன்பு இந்து சன்னி ஆஜராகி தனது கணவனை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு இந்து சன்னி மற்றும் அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஜோசப் ஆகிய இருவரையும் கைது செய்தார். இது தொடர்பான வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி சந்தோஷ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாற்றப்பட்ட இந்து சன்னி மற்றும் லிண்டோ ஜோசப் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார். தாலி கட்டிய கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

