Chennai Heavy Rain Alert: 10 மாவட்டங்களில் இன்று பட்டையை கிளப்பப்போகும் கனமழை! வானிலை மையம் கொடுத்த வார்னிங்!
Chennai Heavy Rain Alert: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் டானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23ம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. . இது, வடக்கு ஓரிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ம் தேதி இரவு 25ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 25 முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.