- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இன்று ரவுண்ட் கட்டும் கனமழை? எந்தெந்த மாவட்டங்களில்! பனிபொழிவு எப்படி இருக்கும்?
தமிழகத்தில் இன்று ரவுண்ட் கட்டும் கனமழை? எந்தெந்த மாவட்டங்களில்! பனிபொழிவு எப்படி இருக்கும்?
Tamilnadu Rain: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், சில தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை குறித்து முக்கிய அப்டேட்
தமிழகத்தில் ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றது முதலே கடுமையான பனிபொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர். இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரத்தில் வெளியில் செல்லும் போது ஸ்வேட்டர் இல்லாமல் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயிலும் இரவு குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
அதாவது பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, விருதுநகர், தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் நாளை மற்றும் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் பற்றிய அப்டேட்
பிப்ரவரி 14
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 15
சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 16
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

