- Home
- Tamil Nadu News
- பொங்கல் பரிசு ரூ.3000 இன்னும் வாங்கவில்லையா? கவலை வேண்டாம்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு!
பொங்கல் பரிசு ரூ.3000 இன்னும் வாங்கவில்லையா? கவலை வேண்டாம்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணத்தை அறிவித்தது. பலர் வெளியூர் சென்றதால் வாங்கத் தவறிய நிலையில், விடுபட்டவர்களுக்கு மீண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பரிசு
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும் பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3000
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 8ம் தேதி சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 04 முதல் 07 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
டோக்கன் விநியோகம்
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாய விலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற வகையில், போகிப் பண்டிகையான 14-ம் தேதியும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை?
ஆனாலும், பலர் பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதால் இந்த பணி முழுமை பெறவில்லை. அதாவது 90 சதவீதத்திற்கு அதிகமானோர் பொங்கல் பரிசு பெற்றபோதிலும், சிலர் இன்னும் வாங்காமல் இருந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு ஒரிரு நாளில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக, இம்மாதம் இறுதி வரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

