- Home
- Tamil Nadu News
- CM Vijay : விஜய் அரசின் அடுத்த மெகா திட்டம்! தமிழகத்திற்கு குவியப்போகும் புதிய முதலீடுகள்! 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன ஸ்பெஷல்?
CM Vijay : விஜய் அரசின் அடுத்த மெகா திட்டம்! தமிழகத்திற்கு குவியப்போகும் புதிய முதலீடுகள்! 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன ஸ்பெஷல்?
Second Investors Summit : புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு இன்று கோவளத்தில் நடைபெறுகிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநா
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 25) இரண்டாவது வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு மேலும் பெரிய அளவில் முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளன. மேலும், ஏற்கனவே தயாராகியுள்ள ஆறு திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். உற்பத்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, பொறியியல், ஜவுளி மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல் மாநாட்டில் கிடைத்த முதலீடுகள் எவ்வளவு தெரியுமா?
தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் முதலாவது வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் மொத்தம் ரூ.67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், அதன் வாயிலாக 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு அறிவித்தது.
அதே நிகழ்ச்சியில் ரூ.4,476 கோடி முதலீட்டில் 5,074 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் எட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.2,676 கோடி முதலீட்டில் 1,550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ஐந்து திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதுதவிர, ரூ.777.74 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்கள் மற்றும் புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
ரூ.1.14 லட்சம் கோடியைத் தாண்டிய முதலீட்டு ஒப்பந்தங்கள்!
முதல் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீடுகளுடன் மட்டும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு முயற்சிகள் நின்றுவிடவில்லை. அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மொத்தம் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிப்பாடுகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 1,21,788 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நவம்பர் 16-ம் தேதி நிலவரப்படி 112 நிறுவனங்களுடன் ரூ.1,14,811.91 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார். இந்த முதலீடுகள் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நவம்பர் 13-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மொத்தமுள்ள 112 ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தகட்ட செயலாக்க நடவடிக்கைகளை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, சுமார் 74.1 சதவீத ஒப்பந்தங்கள் செயல்படுத்துவதற்கான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ன?
புதிய நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலீடுகள் வெறும் ஒப்பந்தங்களாக மட்டும் நின்றுவிடாமல் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வதும் இந்த இரண்டாவது மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.
குறிப்பாக, தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளும்போது சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பது, பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்குவது உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே தமிழகத்திற்கு ரூ.1.14 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது நடைபெறும் இரண்டாவது மாநாட்டின் மூலம் மேலும் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைக்கப்போகின்றன என்பதுதான் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதிய முதலீடுகள் அறிவிக்கப்படுவதுடன், அவை எப்போது தொழிற்சாலைகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறுகின்றன என்பதும் இந்த மாநாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.















