TN Rain Alert: நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். அடுத்த சில நாட்களில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை மட்டுமல்லாமல் எந்ததெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.