- Home
- Tamil Nadu News
- தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..! விஜய்யிடம் கிடுக்குப்பிடி? பனையூரில் என்ன நடந்தது?
தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..! விஜய்யிடம் கிடுக்குப்பிடி? பனையூரில் என்ன நடந்தது?
CBI probes Vijay’s TVK office in Karur stampede case: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையமும், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தின. ஆனால் இதை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றதால் கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணைக்கும், ஒரு நபர் ஆணைய விசாரிக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இறங்கியது. முதலில் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.
300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன்
வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதில் 10க்கும் மேற்பட்ட வணிகர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து சம்மன் அனுப்பியவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பின்பு விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என்றும் தவெக வசம் உள்ள விஜய் பிரசார வாகனத்தின் சிசிடிவி காட்சியை ஒப்படைக்கக் கோரி சம்மன் கொடுத்ததாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? தவெக விளக்கம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், ''கரூர் சம்பவம் தொடர்பாக எங்களிடம் உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். இது தொடர்பாகவே சம்மன் கொடுத்தனர். சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுத்த சிசிடிவி காட்சிகள் குறித்து கேட்டனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை 3 நாட்களில் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளோம்'' என்றார்.