IPL: மும்பை இந்தியன்ஸ் போட்டி நடைபெறும் இடம் திடீர் மாற்றம்! என்ன காரணம்?
மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை-இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் போட்டி தரம்சாலாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Mumbai Indians vs Punjab Kings IPL Match
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமாக உள்ளது. இந்த பதற்றத்துக்கு இடையே இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. போர் பதற்றம் நிலவுவதால் ஐபிஎல் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் போட்டி மாற்றம்
இந்நிலையில், மே 11ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) இடையேயான போட்டி தரம்சாலாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தரம்சாலா விமான நிலையம் மூடப்பட்டதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டிக்கு பாதுகாப்பு
இந்நிலையில், பெரும் பதற்றத்துக்கு மத்தியில் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியாவின் மிக அழகிய மைதானம் மற்றும் உயரமான மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை சுமார் 20,000க்கு மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளதாலும், இமாச்சலப் பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் இராணுவ எச்சரிக்கை அதிகரித்ததாலும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானம்
மைதானத்திலும் அதைச் சுற்றியும் சுமார் 1,200 காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். ட்ரோன்கள் கூட்டத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும். உணவுப் பொருட்கள், நாணயங்கள், பாட்டில்கள் மற்றும் வீசக்கூடிய பொருட்களைத் தவிர்த்து, நுழைவு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.