- Home
- Spiritual
- Vinayagar Chaturthi: ஒரு புல்லுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையா? விநாயகருக்கு அருகம்புல் ஏன் படைக்கிறோம்?
Vinayagar Chaturthi: ஒரு புல்லுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையா? விநாயகருக்கு அருகம்புல் ஏன் படைக்கிறோம்?
Arugampul: விநாயகர் சதுர்த்தியில் அருகம்புல்லுக்கு ஏன் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?அனலாசுரன் தொடர்பான புராணக் கதை முதல் அருகம்புல்லின் ஆன்மிக முக்கியத்துவம் வரை, விநாயகருக்கு அருகம்புல் படைப்பதன் சுவாரஸ்ய காரணங்களை தெரிந்துகொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டாலே வீடுகள் தோறும் விநாயகர் சிலை, கொழுக்கட்டை என பக்தி மணம் வீசத் தொடங்கிவிடும். விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபடுவதும் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும். அந்த வகையில், அருகம்புல்லுக்கு விநாயகர் வழிபாட்டில் தனி முக்கியத்துவம் உண்டு.
மலர்களை விட அருகம்புல்லை விநாயகருக்கு ஏன் அதிகம் படைக்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் புராணக் கதை என்ன? அருகம்புல்லின் சிறப்பு என்ன? இதை தெரிந்துகொண்டால் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் ஏன் தவறாமல் இடம்பெறுகிறது என்பது புரியும்.
அருகம்புல் ஏன் விசேஷம்
இந்து சமய வழிபாட்டில் மலர்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட சில மலர்கள் அல்லது இலைகள் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. அதாவது, சிவபெருமானுக்கு வில்வ இலை, மகாலட்சுமிக்கு தாமரை, முருகப்பெருமானுக்கு செவ்வரளி, பெருமாளுக்கு துளசி, சரஸ்வதி தேவிக்கு வெள்ளைத் தாமரை, ஆஞ்சநேயருக்கு செம்பருத்தி. இதுபோல விநாயகருக்கு அருகம்புல் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
அருகம்புல்லுக்கும் விநாயகருக்கும் என்ன தொடர்பு?
அருகம்புல் தூய்மை, எளிமை மற்றும் இயற்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்கு பின்னால் அனலாசுரன் என்ற அசுரனைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.
அனலாசுரன் என்ற அசுரன் தனது உடலில் இருந்து கடுமையான வெப்பத்தை கக்கி தேவர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தியதாக புராணக் கதை கூறுகிறது. இதனால் கவலை அடைந்த தேவர்கள் விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனை எதிர்த்து போரிட்டார்.
ஆனால், விநாயகர் ஏவிய அனைத்து பொருள்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். அவனை அடக்குவதற்காக விநாயகர் அவனை விழுங்கியதாகவும், இதனால் விநாயகரின் உடலுக்குள் கடுமையான வெப்பம் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
அப்போது தேவர்கள் பல்வேறு வழிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்த முயன்றும் பலன் கிடைக்கவில்லையாம். இதனால், தேவர்கள் காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். இதில், முனிவர் அருகம்புல் விநாயகரின் மீது வைத்தார். உடனே விநாயகர் உடலின் வெப்பம் தணிந்து அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக புராணம் கூறுகிறது. இதனால் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றதாக நம்பப்படுகிறது.
ஏன் அருகம்புல் சிறப்பு?
அருகம்புல் எளிதில் கிடைக்கக்கூடியதாகும். கடுமையான வெயிலிலும் மழையிலும் வளரக்கூடிய தன்மை கொண்டது. வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்விடும் அதன் இயல்பு, வாழ்வின் வளர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
விநாயகருக்கு அருகம்புல் சாத்துவது மன அமைதி, தடைகள் நீங்குதல், செழிப்பு போன்ற நம்பிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதேபோல், இறைவனை வழிபடுவதற்கு விலையுயர்ந்த பொருட்கள் அவசியமில்லை என்பதையும் இது உணர்த்துகிறது.
இயற்கையாகக் கிடைக்கும் எளிய பொருளைக்கூட முழு பக்தியுடன் அர்ப்பணித்தால் இறைவனின் அருள் கிடைக்கும் என்ற ஆழமான ஆன்மிக கருத்தை அருகம்புல் வழிபாடு எடுத்துரைக்கிறது.
எப்படி படைக்கலாம்?
விநாயகர் சதுர்த்தி நாளில் அருகம்புல்லை சுத்தமாக கழுவி, சிறிய கொத்துகளாகத் தயார் செய்து விநாயகருக்கு அர்ப்பணிக்கலாம். அருகம்புல்லை மாலையாகவும் கட்டி விநாயகருக்கு போடலாம்.
இந்த விநாயகர் சதுர்த்தியில், மோதகம் மற்றும் மலர்களுடன் அருகம்புல்லையும் படைத்து விநாயகரை வழிபடுங்கள். தலைமுறைகள் கடந்து வரும் இந்த எளிய வழக்கத்திற்குப் பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான புராணக் கதை இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!

