Durga Stalin: குருவாயூர் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் தங்க கிரீடம் நன்கொடை; மதிப்பு எத்தனை லட்சம் தெரியுமா?
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
Durga Stalin
இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார். இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது.
இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம். 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான நிர்வாக தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடம், சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார்.