- Home
- Spiritual
- Valmiki Jayanti: வால்மீகி ஜெயந்தி.. கொள்ளையனாக இருந்து மகரிஷியாக மாறிய நெகிழ வைக்கும் வரலாறு
Valmiki Jayanti: வால்மீகி ஜெயந்தி.. கொள்ளையனாக இருந்து மகரிஷியாக மாறிய நெகிழ வைக்கும் வரலாறு
Valmiki Jayanti: வால்மீகி ஜெயந்தி 2026 அக்டோபர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. ராமாயண ஆசிரியர் மகரிஷி வால்மீகியின் வாழ்க்கை வரலாறு, விழாவின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மகரிஷி வால்மீகி ஜெயந்தி 2026
ஒரு காலத்தில் தவறான பாதையில் பயணித்தவர், பின்னாளில் உலகமே போற்றும் மகத்தான முனிவராக மாற முடியுமா? ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவது அவரது கடந்த காலமா, அல்லது அவர் எடுக்கும் புதிய முடிவுகளா? இந்தக் கேள்விகளுக்கு அழுத்தமான பதிலைத் தரும் மகரிஷிதான் வால்மீகி.
ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் என கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கதாபாத்திரங்களைக் கொண்ட ராமாயணத்தை உலகிற்கு வழங்கியவர் மகரிஷி வால்மீகி. வடமொழி இலக்கியத்தின் முதல் கவிஞர் என்று போற்றப்படும் இவர், ஆதிகவி என்றும் அழைக்கப்படுகிறார்.
இவரது பிறந்தநாளாகக் கருதப்படும் வால்மீகி ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதப் பௌர்ணமியை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது.
தவறுகளிலிருந்து திருந்தி, ஞானத்தின் பாதையில் பயணிக்க முடியும் என்பதை உணர்த்தும் வால்மீகி ஜெயந்தி 2026 எப்போது வருகிறது? மகரிஷி வால்மீகியின் வாழ்க்கை வரலாறு என்ன? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? விரிவாகப் பார்க்கலாம்.
மகரிஷி வால்மீகி ஜெயந்தி எப்போது?
2026ஆம் ஆண்டு மகரிஷி வால்மீகி ஜெயந்தி அக்டோபர் 26, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது (ஐப்பசி மாதப் பௌர்ணமியை ஒட்டி வரும் நாள்). ராமாயணத்தை இயற்றிய ஆதிகவி வால்மீகியின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நாள், பக்தி, அறம், மனமாற்றம், நல்வழியில் வாழ்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
பௌர்ணமி திதி: அக்டோபர் 25 அன்று காலை 11:55 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 26 அன்று காலை 9:41 மணிக்கு முடிவதாக ட்ரிக் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
மகரிஷி வால்மீகி யார்?
மகரிஷி வால்மீகி இந்திய ஆன்மிகம் மற்றும் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற முனிவர். இவர் வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) ராமாயணத்தை இயற்றியவராகப் போற்றப்படுகிறார்.
ராமாயண ஆசிரியர்: ராமரின் வாழ்க்கை, வனவாசம், சீதையின் பிரிவு, ராவணனுடனான போர் உள்ளிட்ட நிகழ்வுகளை விவரிக்கும் இதிகாசத்தை இயற்றியவர்.
ஞானத்தின் அடையாளம்: தவம், பக்தி, அறம் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட முடியும் என்பதை உணர்த்தும் முனிவராகக் கருதப்படுகிறார்.
லவ, குசர்களின் குரு: ராமாயண மரபின்படி, ராமர் மற்றும் சீதையின் மகன்களான லவனுக்கும், குசனுக்கும் ராமாயணத்தைப் போதித்தவர்.
வால்மீகியின் வாழ்க்கை வரலாறு
கொள்ளையனிலிருந்து மகரிஷியாக மாறிய கதை
மகரிஷி வால்மீகியின் வாழ்க்கையைப் பற்றிப் பல புராண மரபுக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது, ரத்னாகரன் என்ற பெயரில் வாழ்ந்தவர் பின்னர் வால்மீகி முனிவராக மாறிய கதை. அந்த வியப்பூட்டும் கதையைத் தெரிந்துகொள்வோமா?
ரத்னாகரன் என்ற பெயரில் வாழ்ந்த கொள்ளைக்காரன்
ஒருகாலத்தில் காடுகளைக் கடந்து செல்லும் பயணிகளுக்கு அச்சத்தைக் கொடுத்தவர் ரத்னாகரன். வழிப்போக்கர்களை மிரட்டி, அவர்களிடமிருந்த செல்வங்களையும், பொருட்களையும் பறித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதற்கெல்லாம் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையே காரணமாக நினைத்தார். குடும்பத்தின் பசியைப் போக்கவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக எண்ணினார்.
ஆனால், தான் செய்யும் செயல்கள் தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகின்றன என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒருநாள் அவர் சந்தித்த ஒரு முனிவர், அவரது வாழ்க்கையின் திசையையே மாற்றிவிட்டார்.
வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு சந்திப்பு
ரத்னாகரனின் வாழ்க்கையை மாற்றிய நாரதர்
வழக்கம்போல் கொள்ளையடிப்பதற்காகக் காட்டுப் பாதையில் காத்திருந்த ரத்னாகரனுக்கு, அன்று கிடைத்தது செல்வம் அல்ல. வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு சந்திப்பு.
அந்த வழியாக வந்த நாரத முனிவரையும் மிரட்டி, அவரிடமிருந்த பொருட்களைப் பறிக்க முயன்றார். ஆனால், மற்றவர்களைப் போல அச்சமடைந்து நிற்காமல், நாரதர் அமைதியாக அவரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். “நீ உன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பாவச் செயல்களைச் செய்கிறாய் அல்லவா? அப்படியானால், அந்தப் பாவங்களில் உன் குடும்பத்தினரும் பங்கு ஏற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.
இதைக் கேட்ட ரத்னாகரன் ஒரு கணம் திகைத்துப்போனார். இதுவரை தனது குடும்பத்திற்காகத்தான் அனைத்தையும் செய்வதாக நினைத்திருந்த அவருக்கு, நாரதரின் கேள்வி புதிதாகச் சிந்திக்க வைத்தது.
உண்மையைத் தெரிந்துகொள்ளத் துடித்த அவர், உடனே தனது குடும்பத்தினரிடம் சென்று இதற்கான பதிலைக் கேட்க முடிவெடுத்தார்.
பாவத்தில் பங்கு ஏற்றுக்கொள்வீர்களா?
குடும்பத்தினர் சொன்ன பதில் அவரை அதிர்ச்சியடையச் செய்தது
ரத்னாகரன் தனது குடும்பத்தினரிடம் சென்று, "உங்களுக்காகத்தானே நான் வழிப்பறி செய்து பொருட்களைக் கொண்டு வருகிறேன். அதனால் ஏற்படும் பாவத்திலும் நீங்கள் பங்கு ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டார்.
ஆனால், குடும்பத்தினரோ, தங்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது உங்கள் பொறுப்பு. நீங்கள் செய்யும் தவறுகளின் விளைவுகளைத் தாங்கள் ஏற்க முடியாது என்று பதில் அளித்துள்ளனர்.
இதைக் கேட்ட ரத்னாகரன் நிலைகுலைந்து போனார். இதுவரை தனது குடும்பத்திற்காகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்த செயல்கள் அனைத்தும், உண்மையில் தனக்கே பாவத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை உணரத் தொடங்கினார்.
தனக்காக யாரும் பாவத்தின் பாரத்தைச் சுமக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த அந்த நொடியில்தான், ரத்னாகரனின் மனதில் மாற்றத்திற்கான விதை முளைத்தது. பின்னர் அவர் எடுத்த முடிவுதான், ஒரு கொள்ளைக்காரனை மகரிஷியாக மாற்றியதாகக் கூறப்படும் வியப்பூட்டும் கதையின் அடுத்த திருப்பம்.
நாரதர் காட்டிய வழி
ராம நாமத்தை உச்சரித்தல்
குடும்பத்தினரின் பதிலால் மனம் மாறிய ரத்னாகரன், நாரத முனிவரிடம் தனது பாவங்களிலிருந்து விடுபட வழிகேட்டார். அப்போது நாரதர் ராம நாமத்தை உச்சரித்துத் தவம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
ஆனால், ரத்னாகரனால் “ராமா” என்று உச்சரிக்க முடியாததால், “மரா, மரா” என்று தொடர்ந்து சொல்லுமாறு நாரதர் வழிகாட்டியதாகப் புராண மரபுக் கதை கூறுகிறது. அதை இடைவிடாமல் உச்சரித்தபோது, “ராமா, ராமா” என்று ஒலிக்கத் தொடங்கியது. இதையடுத்து, மனதை ஒருமுகப்படுத்தி ஆழ்ந்த தவத்தில் அமர்ந்தார் ரத்னாகரன்.
மகரிஷி
கரையான் புற்றிலிருந்து எழுந்த மகரிஷி
ரத்னாகரன் நீண்ட காலம் ஆழ்ந்த தவத்தில் இருந்ததால், அவரது உடலைச் சுற்றிக் கரையான் புற்று உருவானதாகப் புராணக் கதை கூறுகிறது. சமஸ்கிருதத்தில் கரையான் புற்று அல்லது புற்றைக் குறிக்கும் சொல் “வல்மீகம்” (Valmika). அந்தப் புற்றிலிருந்து வெளிவந்ததால், ரத்னாகரன் பின்னாளில் வால்மீகி என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் கொள்ளைக்காரனாக வாழ்ந்த ரத்னாகரன், தவத்தின் மூலம் மனமாற்றம் பெற்று வால்மீகி முனிவராக உயர்ந்தார். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றமே, தவறான பாதையில் சென்ற ஒருவர் மனமாற்றத்தின் மூலம் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற கருத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.
வால்மீகி முனிவர் ராமாயணத்தைப் படைத்தது எப்படி?
வால்மீகி முனிவரின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது ராமாயணத்தின் உருவாக்கம்.
ஒருநாள் தனது சீடருடன் தமஸா நதிக்குச் சென்றிருந்தபோது, இணையாக இருந்த கிரௌஞ்சப் பறவைகளில் ஒன்றை வேடன் கொன்றதைக் கண்டு வால்மீகி முனிவர் மனம் வருந்தியதாகப் புராண மரபு கூறுகிறது. தன் துணையை இழந்த பறவையின் துயரத்தைக் கண்ட அவர், உணர்ச்சிப் பெருக்கில் ஒரு சாபச் சொல்லை உச்சரித்தார்.
அது தாளநயத்துடன் கூடிய செய்யுள் வடிவில் அமைந்ததால், முதல் ஸ்லோகமாகக் கருதப்படுகிறது. பின்னர் பிரம்மதேவரின் அருளால் ராமரின் வாழ்க்கை வரலாற்றை இயற்றும் ஊக்கம் பெற்றதாக ராமாயண மரபு விவரிக்கிறது.
இதன் விளைவாக, ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் உள்ளிட்டோரின் வாழ்க்கையையும், தர்மம், கடமை, அன்பு, தியாகம் போன்ற உயரிய கருத்துகளையும் எடுத்துரைக்கும் ராமாயணத்தை இயற்றிய ஆதிகவி என்ற பெருமையை வால்மீகி முனிவர் பெற்றார்.
ராமாயணம் பொதுவாக ஏழு காண்டங்களைக் கொண்டதாகவும், சுமார் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டதாகவும் மரபில் குறிப்பிடப்படுகிறது. இன்றும் இந்திய இலக்கியம், ஆன்மிகம் மற்றும் பண்பாட்டில் ராமாயணம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
மகரிஷி வால்மீகி ஜெயந்தியின் முக்கியத்துவம் என்ன?
வால்மீகி ஜெயந்தியின் முக்கியத்துவம்
- ஒருவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்த முடியும் என்பதை வால்மீகியின் மரபுக் கதை எடுத்துரைக்கிறது.
- ராமாயணத்தில் இடம்பெறும் தர்மம், கடமை, நேர்மை போன்ற கருத்துகளை நினைவுகூரும் நாளாகும்.
- இந்திய இதிகாச மரபில் வால்மீகியின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பாகும்.
- மனிதர்களிடையே ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் கருத்துகளை நினைவுபடுத்துகிறது.
- ராமாயண பாராயணம், பிரார்த்தனை, ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் நாளாகும்.

