- Home
- Spiritual
- மதுரை மக்களுக்கு 12 நாட்கள் கொண்டாட்டம் தான் – கொடியேற்றத்துடன் தொடங்கிய மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்!
மதுரை மக்களுக்கு 12 நாட்கள் கொண்டாட்டம் தான் – கொடியேற்றத்துடன் தொடங்கிய மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்!
Madurai Meenakshi Amman Temple Teppa Utsavam 2026 Flag Hoisting Events : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
மதுரைக்கு அழகே அந்த மீனாட்சி தான். ஒவ்வொரு ஆண்டும் தை மற்றும் சித்திரை மாதங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் இந்த தெப்ப உற்சவமும் சித்திரை திருவிழாவும் ரொம்பவே விசேஷம். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபமான சித்திரை திருவிழாவும் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தான் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தை மாதம் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழாவான தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
தெப்ப உற்சவம்
தைப்பூசத்தன்று கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தெப்பத்தில் 3 முறை சுற்றி வரும் வைபவம் நடைபெறும். கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் மதுரை திருமலை நாயக்க மன்னர் கட்டிய குளம் தான் இந்த தெப்பக்குளம். இந்த குளம் கிட்டத்தட்ட 16 அடி ஆழம் கொண்டதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்
வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் நிலையில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் கொடிமரம் அருகில் எழுந்தருள செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
இதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை மற்றும் மாலை என்று இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா நடைபெறும். இதில் விழாவின் 6 ஆவது நாள் திருவிழாவாக வரும் ஜனவரி 26ஆம் தேதியன்று வரலாற்று லீலையும், 10ஆம் நாள் திருவிழாவாக வரும் ஜனவரி 30ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் உற்சவமும், 11ஆம் நாள் திருவிழாவாக வரும் ஜனவரி 31 ஆம் தேதி கதிர் அறுப்புத் திருவிழாவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய மற்றும் கடைசி திருவிழாவாக தெப்ப உற்சவ திருவிழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
தைப்பூச திருநாளான பிப்ரவரி 1ஆம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மீனாட்சி அம்மன் வெள்ளி தொட்டில் என்று சொல்லப்படும் வெள்ளிப் பூண் கொண்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருள. சுந்தரேஸ்வரர் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருள செய்யப்பட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வீதி உலாவாக வலம் வருவார்கள். பின்னர், பூஜைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள 3 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெறும். அதன் பிறகு, தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் சுந்தரேஸ்வரர் தங்ககுதிரையிலும், மீனாட்சி அம்மன் தனி பல்லக்கிலும் எழுந்தருள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப செல்லும் வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.