Tirupati Devotees: திருப்பதி போற ஐடியா இருக்கா? அப்படினா பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Tirupati Devotees: திருமலை திருப்பதிக்கு மலைப்பாதை வழியே வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிலர் நேரடியாக பேருந்து மற்றும் காரில் திருமலை திருப்பதிக்கு சென்றுவிடுகின்றனர். சில பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக நடந்து திருமலையை அடைகின்றனர்.
நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் அறைகள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் தரப்பில் செய்து தரப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்த இரு மலைபாதைகளிலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித்திரிந்த 5 சிறுத்தைகள் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனையடுத்து நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் செல்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியது. நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது. கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டன.
நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து விலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனால் பக்தர்கள் சிறுத்தை பயமின்றி நடைபாதையில் சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்தது. இதனைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர்.
அப்போது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்தியது. இதனால் சிறுத்தை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் நடைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் வருவகை அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.