- Home
- Spiritual
- Karthigai Pournami 2025: வேறு எந்த பௌர்ணமிக்கும் இல்லாத 5 சிறப்புகளை கொண்ட கார்த்திகை பௌர்ணமி.!
Karthigai Pournami 2025: வேறு எந்த பௌர்ணமிக்கும் இல்லாத 5 சிறப்புகளை கொண்ட கார்த்திகை பௌர்ணமி.!
Karthigai Pournami significance: டிசம்பர் 4, 2025 கார்த்திகை மாத பௌர்ணமி தினமாகும். எந்த பௌர்ணமிக்குமே இல்லாத பல தனி சிறப்புகள் இந்த பௌர்ணமிக்கு உண்டு. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கார்த்திகை பௌர்ணமியின் சிறப்புகள்
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் சில மாதங்களில் வரும் பௌர்ணமிக்கு சிறப்பு விசேஷம் இருக்கும். ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியானது அம்மனுக்கு உரியதாக கருதப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் விசேஷமான நாளாகும். அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமிக்கும் பல சிறப்புகள் உண்டு. பலருக்கும் தெரியாத அந்த சிறப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1.ஜோதி வடிவாக காட்சி தந்த இறைவன்
கார்த்திகை பௌர்ணமி தினத்தின் முக்கியமான தனிச்சிறப்பு திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதாகும். சிவபெருமான் திருமால் மற்றும் பிரம்மா ஆகியோருக்கு தனது மேன்மையை உணர்த்தும் வகையில் ஈசன் நெருப்பு பிழம்பாக ஜோதி வடிவமாக காட்சி தந்த நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. உலகெங்கிலும் வாழும் சிவ பக்தர்கள் இந்த தினத்தில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காணவும், கிரிவலம் வரவும் ஒன்று கூடுகின்றனர். இந்த நாளானது பக்தர்களின் துன்பங்களை போக்கி ஒளியை அளிப்பதாக நம்பப்படுகிறது.
2. முருகப் பெருமானுக்கு உகந்த நாள்
கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்தே வரும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் குழந்தைகளாக மாறின. அதை ஆறு கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்ததால் முருகப்பெருமான் கார்த்திகேயன் என பெயர் பெற்றார். கார்த்திகை பெண்கள் வானில் நட்சத்திரமாக ஜொலித்தனர். இந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்றும், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
3.தேவர்கள் கிரிவலம் செல்லும் நாள்
பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செல்வது புண்ணியமானதாக கருதப்படுகிறது. ஆனால் கார்த்திகை பௌர்ணமியில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானது. இந்த நாளில் முப்பது முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், சூட்சும வடிவில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறுகிறது. இந்த நாளில் கிரிவலம் செல்பவர்களுக்கு அவர்கள் செய்யும் நற்காரியங்கள் ஒவ்வொன்றிலும் பன்மடங்கு பலன்களும், மனதிற்கு அமைதியும் மோட்ச நிலையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
4.மும்மூர்த்தி வழிபாடு
கார்த்திகை பௌர்ணமி சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி மும்மூர்த்திகளின் அருளை ஒருங்கே பெறக்கூடிய சிறப்பான நாளாக உள்ளது. இந்த மாதம் முழுவதும் விஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு துளசிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று பத்ம புராணம் கூறுகிறது. கார்த்திகை பௌர்ணமி இந்த வழிபாட்டை நிறைவு செய்ய உகந்த நாளாகும். வடமாநிலங்களில் குறிப்பாக புஷ்கரில் பிரம்மாவின் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. புஷ்கர் ஏரியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
5.தீப வழிபாடு
கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டாலும், கார்த்திகை பௌர்ணமி அன்று தீபம் ஏற்றி வழிபடுவது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இப்ப பௌர்ணமியில் தீபம் ஏற்றுவது இரட்டிப்பு பலன்களைத் தரும். இந்த நாட்களில் கோவில்களிலும், இல்லங்களிலும் விளக்கேற்றி வைப்பது அல்லது தீபதானம் செய்வது அனைத்து விதமான மங்கலங்களையும் தந்து வாழ்வில் உள்ள இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்று நம்பப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நாம் தெரியாமல் செய்த பாவங்கள், பிரம்மஹத்தி தோஷங்கள் விலகும் என்றும், தானியங்கள், பழங்கள், வெண்கல பாத்திரங்கள் ஆகியவற்றை தானம் செய்வது செல்வம் பெருக வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

