- Home
- Spiritual
- Aadi Kiruthigai 2025: குழந்தை வரம் வேண்டுபவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் விரத முறைகள்
Aadi Kiruthigai 2025: குழந்தை வரம் வேண்டுபவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் விரத முறைகள்
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கிருத்திகை தினத்தில் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?
இந்து மதத்தில் ஆடி மாதம் என்பது புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்துடன் இணையும் நாளானது ஆடி கிருத்திகையாக கருதப்படுகிறது. இது முருகப்பெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாகும். இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி கிருத்திகையானது இந்த ஆண்டு இரண்டு நாட்களில் வருகிறது ஜூலை 20 ஆம் தேதி திருத்தணி, வடபழனி ஆகிய கோயில்களில் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி சில கோயில்களில் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.
ஆடி கிருத்திகை வழிபடும் முறைகள்
அதன்படி பார்த்தால் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தான் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட வேண்டும். இருப்பினும் ஜூலை 20 ஆம் தேதியும் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது என்பதால் இந்த தினத்திலும் விரதம் இருந்தாலும் முருகப்பெருமானின் அருளை நம்மால் பெற முடியும். ஆடி கிருத்திகை தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். ஷட்கோண (அறுங்கோண) வடிவிலான கோலமிட வேண்டும். அதில் சரவணபவ என்று எழுதி ஒவ்வொரு வார்த்தைக்கு மேல் ஒரு விளக்கு என ஆறு விளக்குகளை வைக்க வேண்டும். அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வரளி போன்ற சிவப்பு நிறம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். முருகப்பெருமானின் சிலை இருந்தால் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு என்ன படைக்க வேண்டும்?
முருகப்பெருமானின் படம் அல்லது சிலைக்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் பழங்கள் மற்றும் முருகனுக்கு பிடித்த பட்சணங்களை வைத்து படைக்கலாம். குறிப்பாக இனிப்பு பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் செய்து படைக்கலாம். பால், தேன், நெய், சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து செய்யப்படும் பஞ்சாமிர்தமானது முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமானது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் போன்ற பழங்களை படைக்கலாம். பாரம்பரிய இனிப்பு பண்டங்களான அப்பம், அதிரசம் ஆகியவற்றை செய்து படைக்கலாம். பால் பாயாசம், பருப்பு பாயாசம் செய்யலாம். பச்சரிசி மாவினால் செய்யப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை அல்லது பிற இனிப்பு வகைகளை படைக்கலாம். குறிப்பாக வெல்லம் அல்லது தேன் கலந்த இனிப்பு பண்டங்களை படைப்பது மிகவும் விசேஷமானதாகும்.
ஆடி கிருத்திகை விரதத்தை நிறைவு செய்யும் முறை
முருகப்பெருமானுக்கு உகந்த தேன் மற்றும் தினை மாவை படைக்கலாம். கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் போன்ற முருகப்பெருமானுக்குரிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். காலை முதல் இரவு 7 மணி வரை உணவின்றி விரதம் இருப்பது சிறப்பு. முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்து தியானிக்கலாம். மாலை விரதத்தை முடித்து 6 மணிக்கு மேல் மீண்டும் ஷட்கோண தீபம் ஏற்றி முருகனை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் பூஜைகளை முடித்த பின்னர் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு பூக்களால் அர்ச்சனை செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு உணவு அல்லது தர்ம தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியத்தை சேர்க்கும். இரவு 7 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்யலாம்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் செய்ய வேண்டியது என்ன?
ஆடி கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை மனம் உருகி வேண்டி வழிபடுபவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக சில பரிகாரங்களையும் மேற்கொள்ளலாம். அருகிலுள்ள முருகப்பெருமானின் கோயில்களுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபடலாம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்வது நல்லது. முருகப்பெருமானின் வேலுக்கு சிறப்பு பூஜை செய்து அதை வழிபடுவது குழந்தை பாக்கியத்தை அருளும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமானுடன் சந்தான கோபால கிருஷ்ணரை வழிபடுவதும் குழந்தை வரம் கிடைக்க உதவும். கோயில்கள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அங்கு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் போன்றவற்றை செய்யலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், பழனி போன்ற தலங்களுக்கு சென்று வழிபடலாம்.
குறிப்பு: காலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் பழம், பால் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், நீரிழிவு, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கடுமையான விரதங்கள் மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் விரதம் இருப்பதை கைவிடுதல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் அனைத்தும் நம்பிக்கையில் அடிப்படையிலானது மட்டுமே. இறைவனை முழு மனதுடன் நம்பி பக்தியுடன் வழிபட்டால் குழந்தை செல்வம் மட்டுமல்ல அனைத்து வளங்களும் வந்து சேரும்.