மறைந்தது பாடும் நிலா... 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை...!
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கோவிட்- 19 நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா, அமீர், மனோ, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவருடைய மகன் சரண் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர்.
பின்னர் எஸ்.பி.பி.யின் உடல் அங்கிருந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது.
அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார்.
எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
SPB
SPB
SPB
SPB
SPB