- Home
- Cinema
- கருத்து
- AOT Review : கம்பேக் கொடுத்தாரா துல்கர் சல்மான்? ஆகாயத்தில் ஒரு தாரகை படத்தின் விமர்சனம் இதோ
AOT Review : கம்பேக் கொடுத்தாரா துல்கர் சல்மான்? ஆகாயத்தில் ஒரு தாரகை படத்தின் விமர்சனம் இதோ
Aagayathil Oru Thaaragai Movie Review : பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சத்விகா நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்கிற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Aagayathil Oru Thaaragai Review
'தூங்கும் போது வருவது கனவல்ல, உன்னைத் தூங்க விடாமல் செய்வதே கனவு' என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். அப்படிப்பட்ட பெரிய கனவுகளை நோக்கிச் செல்லும் ஒரு படம்தான் இன்று தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கும் துல்கர் சல்மானின் 'ஆகாசம் லோ ஒக தாரா'. இப்படம் தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்கிற பெயரில் ரிலீஸ் ஆகி உள்ளது. கல்பனா என்ற இளம் பெண்ணின் சிறுவயது கனவும், அதை அடைவதற்காக அவளது கணவன் நடத்தும் போராட்டமும்தான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
படத்தின் கதை என்ன?
வளர்ச்சியே எட்டிப்பார்க்காத, அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு சின்ன கிராமத்தில்தான் கதை நடக்கிறது. எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் சுட்டிப் பெண்ணான கல்பனா மூலமாக படம் தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக அவளுக்குள் ஒரு ஆஸ்ட்ரோநாட் (விண்வெளி வீராங்கனை) ஆக வேண்டும் என்ற ஆசை எழுகிறது. அதற்காக அவள் தீவிரமாக முயற்சிக்கிறாள். ஆனால் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
நிலவையும் நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசை அதோடு முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது, அவளது கனவை நிஜமாக்க கணவன் கிருஷ்ணா முன்வருகிறான். அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது? கல்பனாவின் ஆசை நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.
‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ விமர்சனம்
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதைதான். ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் தொய்வில்லாமல், எமோஷனும் த்ரில்லிங்கும் கலந்து ஒவ்வொரு காட்சியிலும் ஆடியன்ஸை படத்தோடு ஒன்ற வைக்கிறது. இந்த விஷயத்தில் திரைக்கதை ஆசிரியர்கள் குன்னம் கங்கராஜு, வசந்த் ஜுரு இருவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் மீண்டும் ஒருமுறை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் என்பது நூறு சதவீதம் உண்மை.
அக்காவின் அரவணைப்பில் வளர்ந்த தம்பியாகவும், மனைவியின் கனவுக்காகத் தன் சந்தோஷங்களைத் தியாகம் செய்யும் ஒரு யதார்த்தமான மனிதனாகவும் துல்கர் அட்டகாசமாக நடித்திருக்கிறார். துல்கரின் கரியரில் ஒன் ஆஃப் த பெஸ்ட் கேரக்டர் என்று ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ கிருஷ்ணாவை தாராளமாகச் சொல்லலாம். எமோஷனல் காட்சிகளில் எல்லாம் ஆடியன்ஸைக் கண் கலங்க வைக்கிறார் துல்கர்.
‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ படம் எப்படி இருக்கு?
கல்பனாவாக புதுமுகம் சாத்விகா வீரவல்லி நடித்திருக்கிறார். இது தன் முதல் படம் என்ற எந்தத் தயக்கமும் இல்லாமல், சமூகம் விதிக்கும் எல்லைகளைத் தாண்டி தன் கனவுகளை நோக்கி முன்னேறத் துடிக்கும் ஒரு பெண்ணாக சாத்விகா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயம் சினிமாவில் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
சரஸ்வதி கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா, ரோகிணியாக ஸ்ருதிஹாசன், பெற்றோராக நடித்தவர்கள் என ஒரு சின்ன காட்சியில் வருபவர்கள் கூட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக எமோஷனல் காட்சிகளை எல்லாம் மக்களின் மனதைச் தொடும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள். காதல், சென்டிமென்ட், ஃபீல் குட் விஷயங்கள் என எல்லாம் கலந்து வந்திருக்கும் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ கண்டிப்பாக ஒரு நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்.














