சைக்கிள் டூ ஜாகுவார் கார் வரை... யார் இந்த தி நகர் சத்யா..? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன்?
முன்னாள் அமைச்சர்கள் மீதே பொரும்பாலும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்படும் நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தி நகர் சத்யா மீது வழக்கு தொடரப்பட்டு சோதனை நடைபெறுவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sathyanarayanan
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சத்யநாரயணன் என்ற தி நகர் சத்யா வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை மற்றும் அவருக்கு சொந்தமான 18க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். இந்தநிலையில் யார் இந்த தி நகர் சத்யா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
யார் இந்த சத்யா.?
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சத்ய நாராயணன் தி நகரில் வசித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சைக்கிள் கடை, பால் வியாபாரம், சி டி விற்பனை ஆகியவற்றை செய்து வந்துள்ளார். இதனையடுத்து 1991-96 காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் கிடைத்தது. அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாகி தி நகர் பகுதியில் பகுதி செயலாளர் பதவியை பெற்றார். 2011 - 16 ஆம் அண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 130 வார்டு கவுன்சிலராக இருந்தவர். சிஎம்டிஏவில் நியமன குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தி நகர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தி.நகர் சத்யா, ஆந்திராவின் சித்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழில்கள் செய்ய தொடங்கினார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர், பெரும்பாலான நேரம் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் சென்று தொழில் ரீதியாக தங்கி வருவதும் உண்டு. பொதுப்பணித்துறையில் காண்ட்ராக்டர் எடுக்கும் வேலையை செய்து வந்திருக்கிறார். அதன் பின் விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் டாஸ்மார்க் பாரும் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், சென்னை தி.நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை கேட்டபோது,
அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டு மாத காலத்தில் தி நகர் சத்யா தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ADMK
சொத்து விவரங்கள் என்ன.?
முன்னாள் எம்எல்ஏ சத்யநாராயணன் மீதான முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. மனைவி மற்றும் மகளது பெயர்களில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திராவில் உள்ள மண்டல் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். மேலும் மனைவி பெயரில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஃபார்ச்சூனர் கார், மகள் பெயரில் சுமார் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார், சத்யநாராயணன் 92 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் கார் என மொத்தமாக வருமானத்துக்கு அதிகமாக இரண்டரை கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து சேர்த்ததாக என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது