குழந்தைகளுக்கு அறிவு பசியோடு... வயிற்று பசி போக்கிய வள்ளல்... காமராசரின் 118 பிறந்தநாள்! சிறப்பு தொகுப்பு!
விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் காமராசர். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. இவரின் 118 பிறந்தநாள் சிறப்பு புகைப்பட தொகுப்புகள் இதோ
காமராசரால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் செய்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக காமராசர்.
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.
அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.
அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் காமராசர் திட்டம் ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.
தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார்.
இவர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இவர் போல் தன்னலம் அற்ற ஒரு தலைவர் வேண்டும் என்பதே பலரது எண்ணம்...