விஜய் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான்..! குறி வைக்கும் தவெக..! பாமகவுக்கு ஓட்டை..!
விஜயின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்டியிடும் சட்டமன்ற தொகுதி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜயின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்டியிடும் சட்டமன்ற தொகுதி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
கடலுார் மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்டது விருத்தாசலம் சட்டசபை தொகுதி. விவசாயம் மட்டுமே பிரதான தொழில். பாமகவின் கோட்டையாக இருந்த தொகுதியில் 2006 சட்டசபை தேர்தலில் களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அடுத்து நடந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் வெற்றி பெற்றார். இது அக்கட்சிக்கு தொகுதியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. இதனால், பாமக கோட்டையில் ஓட்டை விழுந்தது.
இந்நிலையில், விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு, அதிமுக எதிர்ப்பு போன்ற காரணங்களால் தேமுதிக அந்தத் தொகுதியில் பின்னடைவை சந்தித்தது. அதற்கடுத்து அவரது மரணம், நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவியது என தேமுதிக செல்வாக்கை மீண்டும் அங்கு பெற முடியவில்லை.
இதனையடுத்து தவெகவை துவங்கிய விஜய், இரண்டாவது மாநில மாநாட்டில் 'கேப்டன் விஜயகாந்த்' எனது அண்ணன் என குறிப்பிட்டு பேசினார். இதனை, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விமர்சனம் செய்தார். இந்நிலையில், விஜயகாந்துக்கு முதல் வெற்றி வாய்ப்பை கொடுத்த விருத்தாசலம் தொகுதி விஜய்க்கும் வெற்றி வாய்ப்பை தரும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல், விஜயின் குடும்ப ஜோதிடர் ஒருவர், 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கணித்து கூறியுள்ளார். 'வி' என்றால் 'விக்டரி', வெற்றி என அர்த்தம். விஜய் என்ற பெயரின் முதல் எழுத்து 'வி' என்பதால், அதே எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிடுவது சிறந்தது என கூறப்படுகிறது. இதனால், விஜயகாந்தை அண்ணன் என கூறும் தவெக தலைவர் விஜய், விருத்தாசலம் தொகுதியை 'குறி' வைப்பதாகவே கூறப்படுகிறது.
இதற்காக தொகுதியின் பலம், பலவீனம் மற்றும் மக்களின் வருவாய் ஆதாரம், எதிர்ப்பார்ப்பு மற்றும் திமுக - அதிமுகவின் கட்டமைப்பு குறித்த விவரங்களை தவெகவினர் சேகரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில், விருத்தாசலத்தில் விஜய் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக பேசப்படுகிறது. விஜயகாந்தை தொடர்ந்து, விஜயும் களமிறங்க தயாராகி வருவதால், விருத்தாசலம் தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.