நீண்ட பயணத்தை நேசிப்பவரா? உங்களுக்காகவே இந்திய ரயில்வே இயக்கும் டாப் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
நீண்ட தூர பயணிங்களுக்கு ஏற்றது ரயில்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவில் உள்ள நீண்ட தூர ரயில்கள் எவை? அவற்றில் டாப் 5 இடத்தைப் பிடித்துள்ள ரயில்களை இத்தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் மிக நீண்ட ரயில்கள்
நீண்ட தூரத்தில் உள்ள ஊர்களுக்கு குறைவான கட்டணத்தில் வசதியாக பயணிக்க ஏற்றது ரயில்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை. நீண்ட தூர பயணங்களை விரும்புகிறவர்கள் பயணிப்பவர்களுக்கும் ரயில்கள் மிகவும் விருப்பமானவையாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் உள்ள முக்கியமான ஐந்து மிக நீண்ட ரயில் பயணங்கள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (விவேக் எக்ஸ்பிரஸ்)
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள திப்ருகருக்கும் நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கும் இடையே இயக்கப்படுவதுதான் விவேக் எக்ஸ்பிரஸ். இரண்டு நகரங்களுக்கும் இடையில் உள்ள 4273 கிமீ தூரத்தை இந்த ரயில் கடக்கிறது. இதன் பயண நேரம் 80 மணிநேரம் 15 நிமிடம். நாட்டிலேயே மிக நீளமான ரயில் பாதையும் இதுதான். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 55 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் சென்ட்ரல் - சில்சார் எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தி இடையே இயக்கப்பட்டுவந்த இந்த அதிவிரைவு ரயில் 2017ஆம் ஆண்டில் இருந்து சில்சார் வரை இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரயில் பயணம் நாட்டின் இரண்டாவது நீண்ட ரயில் பயணம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் தொடங்கி சில்சார் வரை உள்ள 3,932 கிமீ தூரத்தை இந்த ரயில் 76 மணி நேரத்தில் கடக்கும். 54 ரயில் நிலையங்களில் நிற்கும்.
ஜம்மு தாவி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்)
ஜம்மு தாவி - கன்னியாகுமரி இயே பயணிக்கும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் 3787 கிமீ தூர பயணத்தை 72 மணிநேரத்தில் மேற்கொள்கிறது. இந்தியாவின் 12 மாநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த ரயில் 73 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதுதான் இந்தியாவில் மூன்றாவது நீண்ட ரயில் பயணப் பாதை.
டென் ஜம்மு எக்ஸ்பிரஸ்
ஜம்மு காஷ்மீரின் கத்ரா மற்றும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி வரை டென் ஜம்மு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இது நாட்டின் நான்காவது மிக நீண்ட ரயில் பயணம். இதன் பயணத் தொலைவு 3,631 கிமீ. பயண நேரம் 71 மணிநேரம் 20 நிமிடம். 11 மாநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த ரயில், 62 ஸ்டேஷன்களில் நிற்கும்.
மங்களூரு - ஜம்மு எக்ஸ்பிரஸ் (நவ்யுக் எக்ஸ்பிரஸ்)
நவ்யுக் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவி மற்றும் கர்நாடகாவின் மங்களூர் சென்ட்ரல் இடையே பயணிக்கும். 3607 கிமீ தூரத்தைக் கடக்கும் ஐந்தாவது நீளமான ரயில் பயணம் இது. நவ்யுக் எக்ஸ்பிரஸ் வாரம் தோறும் இயக்கப்படும். ஒவ்வொரு முறையும் 12 மாநிலங்கள் வழியாக 61 ரயில் நிலையங்களில் நின்று பயணிக்கும். பயண நேரம் 68 மணிநேரம்.