- Home
- Lifestyle
- வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று 2022..இதன் கருப்பொருள் மற்றும் வரலாற்று சிறப்பு பற்றி தெரியுமா..?
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று 2022..இதன் கருப்பொருள் மற்றும் வரலாற்று சிறப்பு பற்றி தெரியுமா..?
International Day for the Eradication of Poverty 2022: வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வறுமையின் உலகளாவிய பிரச்சனை, மனித உரிமைகள் மற்றும் வன்முறை போன்ற பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. வறுமையில் வாடும் மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் இந்த நாள் குறிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வறுமைக்கு எதிரான நிலையான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நம்புகிறது. வறுமையானது வீடற்ற தன்மை, பசி, அடிப்படை வசதிகள் இல்லாமை மற்றும் வன்முறை போன்ற கொடூரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க தங்கள் பங்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது.
வரலாறு:
வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில், கடந்த 1948 இல் கையெழுத்திடப்பட்ட தீர்மானத்தின் படி, 22 டிசம்பர் 1992 அன்று ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபை அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. பாரிஸில் உள்ள ட்ரோகாடெரோவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இங்குதான் 1948 இல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்தானது.
முக்கியத்துவம்:
வறுமையில் வாடும் மக்கள் அடிப்படைத் தேவைகளை இழந்து, பாதுகாப்பற்ற வீடுகள், நீதிக்கான சமத்துவமின்மை, ஆபத்தான பணிச்சூழல், அரசியல் அதிகாரமின்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின்மை ஆகிவற்றை பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைப்பதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள்:
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தின் இந்த 30வது ஆண்டின் கருப்பொருள் "ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்பதாகும்.
தற்போதைய நிலைப்படி, உலகெங்கிலும் சுமார் 689 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். அவர்களில் பாதி எண்ணிக்கை குழந்தைகள் மற்றும் இளைஞர்களாக உள்ளனர்.
மிகவும் வறுமையில் வாடும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு பள்ளிப்படிப்பு இல்லை அல்லது அடிப்படைக் கல்வி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.