இரும்பு தோசை கல்லை இப்படி சுத்தம் செய்து பாருங்க... ஒவ்வொரு தோசையும் மொறு மொறுவென சுடலாம்..!
how to clean iron dosa tawa: இரும்பு தோசை கல்லை புதிது போல சுத்தம் செய்து, ருசியான மொறுமொறு தோசை சுடுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
how to clean iron dosa tawa: நான்ஸ்டிக் தவாவில் இருக்கும் பெயிண்ட் கொஞ்ச நாளில் உறிந்து வர தொடங்கும். இதனால் நமக்கு புற்றுநோய் மாதிரியான கொடிய நோய்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிப்பதால், மீண்டும் மக்கள் இரும்பு தோசை கல்லுக்கு மாறி வருகின்றனர். ஆனால் இரும்பு தோசை கல்லை எப்படி பழக்குவது? துருப்பிடிக்காமல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் இரும்பு தோசை கல்லை எப்படி பழகினால் மொறு மொறுவென தோசை சுடலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருக்கும் இரும்பு தோசை கல் ஏற்கனவே துருப்பிடித்து இருந்தால் முதலில் அதனை நீக்க வேண்டும். முறையாக பராமரிக்காத தோசை கல்லில் மொறு மொறுவென தோசை வராது. சில சமயம் மாவு கல்லிலேயே ஒட்டிக்கொள்ளும். தோசையை திருப்பி கூட போட முடியாது. துரு இல்லாமல் தோசை கல்லை பராமரிக்க எலுமிச்சை பழம் போதும். இதை இரண்டாக வெட்டி கொள்ளுங்கள். கல் உப்பை பொடி செய்து எடுங்கள். அரை எலுமிச்சை பழத்தால் கல் உப்பை தொட்டு எடுத்து தோசை கல் மீது தேய்த்து விடுங்கள்.
இப்படி தேய்க்க ஆரம்பிக்கும் போது துருக்கறை மெல்ல விடுபடும். இரும்பு தோசை கல்லின் மீது அப்பியிருக்கும் எண்ணெய் கறைகளும் நீங்க ஆரம்பிக்கும். எலுமிச்சை பழத்தில் உப்பு வைத்து கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாவது தோசை கல்லை தேய்த்து விட வேண்டும். துரு கறை எண்ணெய் பிசுக்கு எல்லாம் நீங்கிய பிறகு தோசை கல்லை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இதுமட்டும் போதாது. தோசை கல் பழக இன்னொரு விஷயம் செய்ய வேண்டும்.
தோசை கல்லில் இரண்டு பக்கங்களிலும் ஏதேனும் எண்ணெய் பூசி கொள்ளுங்கள். தோசை வார்க்கும் குழிப் பகுதியில் (மையம்) சோறு வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். எண்ணெய் மீது கஞ்சி தண்ணீர் ஊறி வரும்போது வழவழப்பு தன்மை வரும். இதனை ஒருநாள் ஊறவிட வேண்டும்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் வறுத்த உப்பு கடலை ஏன் சாப்பிடணும்?
மறுநாள் தோசை கல்லை எடுத்து வெறும் நீரில் அலசிவிடுங்கள். ஆர்வத்தில் சோப்பு போட்டு விடாதீர்கள்; வெறும் தண்ணீர் போதும். அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து காய வையுங்கள். பின்னர் கொஞ்சம் புளியை (விதை இல்லாமல்) காட்டன் துணியில் வைத்து எண்ணெய்யில் நனைத்து தோசை கல்லில் வைத்து தேய்க்கவும். முதல் தோசையை தடிமனாக கல் தோசை போல சுட்டு எடுங்கள். தோசை கல்லில் ஒட்டாமல் நன்றாக வரும். இதன் பிறகு அடுத்தடுத்த தோசைகளை மெல்லிசாக வார்த்து எடுங்கள். கனமில்லாத மெல்லிய மொறுமொறு தோசைகள் வீட்டிலே செய்யலாம்.
தோசை சுடும் போது எண்ணெய் தடவ துணியை உபயோகம் செய்யாமல் பாதி வெட்டிய வெங்காயம் கத்தரிக்காய் ஆகியவற்றை பயன்படுத்தலாம் இது தோசை ஒட்டாமல் வருவதற்கு உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?