- Home
- Lifestyle
- வேலை முடிந்து கண்கள் எரிகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறி; தப்பிக்க மருத்துவர்கள் சொல்லும் 4 வழிகள்!
வேலை முடிந்து கண்கள் எரிகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறி; தப்பிக்க மருத்துவர்கள் சொல்லும் 4 வழிகள்!
நீண்ட நேரம் கணினி, மடிக்கணினி, மொபைல் ஸ்கிரீனை பார்த்து வேலை செய்பவர்களுக்கு நாள் முடிவில் ஏற்படும் கண் எரிச்சல் வெறும் சோர்வு மட்டுமல்ல; அது ‘டிஜிட்டல் கண் அழுத்தம்’ போன்ற பாதிப்புகளின் எச்சரிக்கை சமிக்ஞையாக இருக்கலாம்.

கம்ப்யூட்டர் பார்த்தாலே கண் உறுத்துதா?
நீண்ட நேர அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும்போது கண்களில் ஏற்படும் எரிச்சலை, நம்மில் பெரும்பாலானோர் வெறும் சோர்வு என்று சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். ஆனால், உங்கள் கண்கள் நீங்கள் நினைப்பதை விட அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை உடல் உணர்த்தும் எச்சரிக்கை சமிக்ஞைதான் இந்த எரிச்சல் என கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளுக்கு முன்பாக மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடும் தற்கால பணிச் சூழலில், கண் சார்ந்த அசௌகரியங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டன. எப்போதாவது ஏற்படும் கண் எரிச்சல் பெரிய கவலைக்குரிய விஷயம் இல்லை என்றாலும், தொடர்ந்து நீடிக்கும் எரிச்சல் டிஜிட்டல் கண் அழுத்தம் (Digital Eye Strain), சுற்றுப்புறக் காரணிகள் மற்றும் சில நேரங்களில் தீவிர கண் குறைபாடுகளின் தொடக்கமாகக் கூட இருக்கலாம்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஸ்கிரீன்களைப் பார்ப்பது நமது இயல்பான கண் சிமிட்டும் முறையை மாற்றியமைப்பதே இதற்கு முதன்மைக் காரணம். மணிக்கணக்கில் கணினி ஸ்கிரீனை உற்றுப் பார்க்கும்போது, நமக்கே தெரியாமல் கண் சிமிட்டும் வேகம் பெருமளவு குறைந்துவிடுகிறது. கண் சிமிட்டுவது தான் கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் நாம் சிமிட்டுவதை நிறுத்தும்போதோ? குறைக்கும்போதோ? கண்ணீர் விழியின் மேற்பரப்பு முழுவதும் சீராகப் பரவுவது தடைபடுகிறது.
கண்களில் ஏற்படும் இந்த வறட்சி காரணமாக கண்கள் பாரமாகவும், உறுத்தலாகவும், எரிச்சலாகவும் மாறுகின்றன. இடைவேளையின்றி நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்யும்போது, நாள் முடிவில் அறிகுறிகள் மேலும் தீவிரமடைவதை பலர் உணர்கிறார்கள். இதுமட்டுமின்றி, அலுவலகத்தில் இருக்கும் ஏசி காற்று, முறையற்ற வெளிச்சம், திரையின் அதீத பிரகாசம் மற்றும் தவறான கோணத்தில் வைக்கப்பட்டுள்ள கணினி அமைப்புகள் ஆகியவை கண் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. மருத்துவ உலகில் இதுவே 'டிஜிட்டல் கண் அழுத்தம்' என்று அழைக்கப்படுகிறது.
வெறும் ஸ்கிரீன் சோர்வு மட்டுமல்ல!
சிலருக்கு இந்த எரிச்சல் வெறும் ஸ்கிரீன் சோர்வோடு நின்றுவிடுவதில்லை. இது 'உலர் கண் குறைபாடு' (Dry Eye Syndrome) எனப்படும் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் கரிமா சௌத்ரி. கண்களில் போதுமான கண்ணீர் சுரக்காத நிலை அல்லது சுரக்கும் கண்ணீர் மிக வேகமாக ஆவியாகிவிடும் நிலையே இதுவாகும். ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது, தூசி, காற்று மாசுபாடு, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆகியவை இந்த வறட்சியை மேலும் மோசமாக்கும். குறிப்பாக அதிக மக்கள் நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு நிறைந்த நகரங்களில் வசிப்பவர்களுக்கு, ஏற்கனவே உலர் கண் பாதிப்பு இருந்தால், அது கண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
கண் சோர்வில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
அன்றாடப் பழக்கவழக்கங்களில் நாம் செய்யும் சில சிறிய மாற்றங்கள் கண்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கணினியில் வேலை செய்யும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, குறைந்தது 20 அடி தூரத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இந்த எளிய பழக்கம் கண்ணின் தசைகளைத் தளர்த்தி, நீண்ட நேரக் கவனக் குவிப்பிலிருந்து கண்களுக்கு ஓய்வளிக்கிறது. ஸ்கிரீனில் ஆழ்ந்து வேலை செய்யும்போது கண்சிமிட்ட மறந்துவிடுவதால், விழிப்புணர்வோடு அடிக்கடி கண் சிமிட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கணினி ஸ்கிரீனின் வெளிச்சத்தை அறைக்கு ஏற்றவாறு சீராக வைத்திருக்க வேண்டும்; மேலும் கண்களுக்கு வசதியான இடைவெளியில் திரையை வைத்துப் பணியாற்ற வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவது கண்களைப் பெரிதும் பாதிக்கிறது என்பதால் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு கண்களுக்கு ஈரப்பதம் தரும் 'லூப்ரிகேட்டிங்' கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
வேலை நாளின் முடிவில் எப்போதாவது கண் எரிச்சல் ஏற்படுவது இயல்புதான்; ஆனால், அது தொடர்கதையாக மாறினால் ஒருபோதும் அலட்சியம் காட்டக்கூடாது. கண் எரிச்சல் தணியாமல் நீடித்தாலோ, அல்லது அதனுடன் கண்களில் சிவத்தல், வலி, பார்வை மங்குதல் போன்ற பிற அறிகுறிகள் தென்பட்டாலோ கண் மருத்துவரைச் சந்திப்பதைத் தள்ளிப்போடாதீர்கள். நாம் சாதாரண திரை சோர்வு என்று நினைக்கும் ஒரு விஷயம், கண்களுக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு தேவை என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம். அந்த சிக்னல்களை ஆரம்பத்திலேயே கவனிப்பது, சிறு தொந்தரவு ஒரு பெரிய கண் பாதிப்பாக மாறுவதைத் தடுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.




