- Home
- இந்தியா
- அதிக சத்தத்துடன் ஒலித்த டி.ஜே இசை... இதயத் துடிப்பு நின்று 20 நாள் பச்சிளம் பெண் குழந்தை பலி; சிலை கரைப்பு ஊர்வலத்தில் விபரீதம்!
அதிக சத்தத்துடன் ஒலித்த டி.ஜே இசை... இதயத் துடிப்பு நின்று 20 நாள் பச்சிளம் பெண் குழந்தை பலி; சிலை கரைப்பு ஊர்வலத்தில் விபரீதம்!
உத்தரப் பிரதேசம் பல்லியாவில் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது ஒலித்த அதிகப்படியான டி.ஜே இசையால், இதயத் துடிப்பு நின்று 20 நாள் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிக சத்தத்துடன் ஒலித்த டி.ஜே இசை: பெண் குழந்தை உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா (Ballia) மாவட்டத்தில், சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது வீட்டின் முன் நின்று அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்ட டி.ஜே (DJ) இசையால், இதயத் துடிப்பு நின்று 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
பல்லியா மாவட்டத்தின் மணியார் (Maniyar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடியாரி (Mudiyari) கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரீமா தேவி என்பவர் தனது 20 நாள் பச்சிளம் பெண் குழந்தையுடன் குடிசை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சிலை கரைப்பு ஊர்வலத்தில், டி.ஜே இசைக்கருவிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று இவர்களது வீட்டின் அருகே நின்றுள்ளது.
அதில் மிக அதிக சத்தத்துடன் (Blaring music) பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடும் இரைச்சல் காரணமாகப் பச்சிளம் குழந்தையின் இதயத் துடிப்பு நின்று போனதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். வீட்டின் முன் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றும், சத்தத்தைக் குறைக்குமாறும் பலமுறை மன்றாடியும், டி.ஜே இசையை இயக்கியவர்கள் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உறவினர் உருக்கமான பேட்டி
இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த குழந்தையின் அத்தை கூறுகையில், புகுந்த வீட்டில் தாயையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள ஆளில்லாததால், எனது அண்ணி ரீமா தேவி தனது பிறந்த வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 10 நாட்களாக நாங்கள் தான் அவர்களை கவனித்து வந்தோம். அதிக சத்தத்துடன் டி.ஜே இசையை ஒலிக்கவிட்டபடி வந்த லாரி எங்கள் வீட்டின் முன் வந்து நின்றபோதுதான் குழந்தையின் இதயம் நின்று போனது. இங்கே நிறுத்த வேண்டாம், இவ்வளவு சத்தமாக இசையைப் போடாதீர்கள் என்று நாங்கள் கெஞ்சினோம்; ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையைச் செவிமடுக்கவே இல்லை என்றார்.
தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, அதிக சத்தத்தால் திடீரென வீறிட்டு அழுததாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். குழந்தையின் மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை நடவடிக்கை
இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஜெய் சங்கர் மிஸ்ரா கூறுகையில், குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்காக (Post-mortem) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, டி.ஜே இசைக்கருவிகள் ஏற்றி வரப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கையின் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













