ஒரு கோடி மரக்கன்றுகளை நட்ட மர மனிதர் ராமையா காலமானார்
பத்மஸ்ரீ ராமையா மாரடைப்பால் காலமானார். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்ட பசுமைப் போராளியின் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chettu Ramaiah
'மர மனிதர்' ராமையா
பத்மஸ்ரீ விருது பெற்ற 'மர மனிதர்' ராமையா சனிக்கிழமை காலமானார். தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 87.
கம்மம் மாவட்டத்தில் பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" அல்லது "வனஜீவி ராமையா" என்று பிரபலமாக அறியப்பட்ட தரிப்பள்ளி ராமையா, பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வந்தவர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
Vanajeevi Ramaiah
ஈடுசெய்ய முடியாத இழப்பு
ராமையாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, அவரது மறைவு சமூகத்திற்கு "ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று கூறியுள்ளார். இயற்கையும் சுற்றுச்சூழலும் இல்லாமல் மனிதகுலம் உயிர்வாழ்வது சாத்தியமற்றது என்று ராமையா உறுதியாக நம்பியதாகவும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"ராமையா ஒரு தனிநபராக மரம்நடும் பணியைத் தொடங்கி முழு சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்," என ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டியுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.
Daripalli Ramaiah
தலைவர்கள் இரங்கல்
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார், பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல தலைவர்கள் ராமையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tree man Ramaiah
பசுமைப் போராளி
தனது வாழ்நாளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை திரு. ராமையா நட்டுள்ளதாகவும், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னணியில் இருந்ததாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற பசுமைப் போராளியின் மறைவு தெலுங்கானாவிற்கும பேரிழப்பாகும் என சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வருங்கால சந்ததியினருக்கு திரு. ராமையாவின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று கே.சி.ஆர். தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.