இனி ரிசர்வேஷனுக்காக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.! ரயில்வே துறை எடுத்த சூப்பர் திட்டம்
ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வரும் நாட்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் இன்றி பொதுப்பெட்டியில் கூட பயணிக்கும் நிலை உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் விரும்பும் ரயில் பயணம்
நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் பெரிதும் விரும்புவது ரயில் சேவையைத்தான். குறைவான கட்டணம் மட்டுமின்றி பாதுகாப்பான பயணத்திற்கு மக்கள் ரயிலில் பயணிக்க விரும்புவார்கள். அந்த வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
அதன் படி மக்கள் பணிக்காகவும், சுற்றுலாவிற்காகவும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்களில் கூட்டானது அலை மோதுகிறது. கழிவறையிலும் பயணம் செய்கின்ற நிலை தான் தற்போது நீடித்து வருகிறது.
நிரம்பி வழியும் ரயில்கள்
இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி பெட்களில் முன்பதிவு செய்திருந்தாலும் போதுமளவிற்கு பொதுப்பெட்டி இணைக்கப்படாத காரணத்தால் அங்கும் வட மாநிலத்தவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே ரயில்களில் கூட்டம் நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையிலும், கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் வசதிக்காக புதிய திட்டத்தை ரயில்வே துறை சார்பாக வகுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரயில் பெட்டிகள்
அதன் படி கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 229 ரயில்களில் 583 புதிய பொதுப் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பொதுப்பெட்டிகளில் அமர்ந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த மாதம் (நவம்பர் மாதத்திற்குள்) 370 வழக்கமான ரயில்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பெட்டிகளை சேர்க்க ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
Indian Railway
பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணம்
குறிப்பாக ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரயில் எந்த வித சிரமமும் இல்லாமல் பயணிக்க வாய்ப்பு உருவாகும் என கருதப்படுகிறது.
10 ஆயிரம் கூடுதல் பொதுப்பெட்டிகள்
மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் பொது பெட்டிகளை ரயில்களில் இணைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு தினமும் சுமார் 8 லட்சம் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் கூடுதலாக பயணிக்க முடியும். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் 4 பொதுப் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது ரயில்களில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க வாய்ப்பு உருவாகவுள்ளது.