அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முதல் முறையாகச் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பைக்கில் பாங்காங் ஏரிக்குப் பயணித்தார்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முதல் முறையாகச் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பைக்கில் பாங்காங் ஏரிக்குப் பயணித்தார். அந்தப் பயணத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி தன் தந்தையும் முன்னாள் இந்தியப் பிரதமருமான ராஜீவ் காந்தி கூறியதையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.
பைக் பிரியரான ராகுல் காந்தி பல வகையான பைக்குகளை தன்வசம் வைத்திருப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை பைக் ஓட்ட வேண்டாம் என்று பாதுகாவலர்கள் அறுவுறுத்தியுள்ளனர் என்றும் அவர்கள் அனுமதிக்காததால் தான் பைக் ஓட்டுவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் ராகுல் காந்தி பைக் ஓட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) லடாக்கிற்குச் சென்றார் ராகுல் காந்தி. லடாக் தலைநகர் லேவில் இளைஞர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாட பாங்காங் ஏரிக்கு பைக்கில் பயணித்தார்.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் சமூக வலைதலங்களைக் கலக்கி வருகின்றன. இந்தப் பயணம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி என என் தந்தை அடிக்கடி கூறுவார்" என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரும் 25ஆம் தேதி வரை அவர் லடாக்கில் தங்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி கல்லூரிக் காலத்தில் கால்பந்து வீரராக இருந்தவர். அவர் லேவில் நடைபெறும் கால்பந்துப் போட்டியை ராகுல் பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
லடாக்கின் மலைவாழ் மக்கள் கவுன்சில் தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தத் தேர்தல் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடக்க இருப்பதால் அதுவரை ராகுல் காந்தி லடாக்கில் இருப்பார் எனவும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.